இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பாஜக எம்.பி. பிரஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களான சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, வினிஷ் போகத், சங்கீத்போகத் ஆகியோருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.


பதக்கங்களை ஆற்றில் வீச முயற்சித்த மல்யுத்த வீரர்கள்:


மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், இந்திய நாட்டிற்காக பல பதக்கங்களை தேசிய அளவில் வென்று கொடுத்த மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் ஆண்டுக்கணக்கில் பயிற்சி செய்து மிகவும் போராடி வாங்கிய தங்களது பதக்கங்களை கங்கை நதியில் நேற்று வீச முயற்சி செய்தனர்.


தங்களது பதக்கங்களை கங்கை நதியில் வீசச்சென்ற அவர்களை, பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் டிகாயித், சமாதானப்படுத்தி தடுத்தி நிறுத்தினார். பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ் பூஷண் சிங்கை 5 நாள்களுக்குள் கைது செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அவர் அவகாசம் வழங்கினார்.


இந்நிலையில், தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என மல்யுத்த வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மத்திய அமைச்சர் வேண்டுகோள்:


இதுகுறித்து அவர் பேசுகையில், "டெல்லி காவல்துறை தங்களின் விசாரணையை முடிக்கும் வரை மல்யுத்த வீரர்கள் காத்திருக்க வேண்டும் மல்யுத்த வீரர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. நாம் அனைவரும் விளையாட்டுக்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்.


மோடி அரசாங்கத்தின் கீழ் விளையாட்டு பட்ஜெட் ₹874 கோடியில் இருந்து ₹2782 கோடியாக உயர்த்தப்பட்டது. கேலோ இந்தியா மற்றும் டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டம் (TOPS) போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன. விளையாட்டு அரங்குக்கு செல்லும் வாய்ப்பை இத்திட்டங்கள் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கின.


விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க கோடிக்கணக்கான பணம் செலவிடப்பட்டது. சுமார் ₹2700 கோடி செலவில் 300 குறிப்பிடத்தக்க விளையாட்டு உள்கட்டமைப்புகள் நாட்டில் கட்டப்பட்டு வருகின்றன. விளையாட்டு வீரர்களின் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக செய்ய முயற்சித்துள்ளோம்.


மேலும் பலவற்றைச் செய்ய விரும்புகிறோம். ஒவ்வொரு விளையாட்டிலும் இந்தியா வலுவாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மல்யுத்த வீரர்களின் கோரிக்கையின் பேரில், அவர்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறிய பிறகு நாங்கள் ஒரு குழுவை உருவாக்கினோம். அவர்கள் கூடுதலாகக் கேட்டார்கள். நாங்கள் அதையும் செய்தோம்.


கமிட்டி தங்கள் அறிக்கையை சமர்ப்பித்தது, அதன் பிறகு டெல்லி போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர். அவர்கள் என்ன கோரினாலும் நாங்கள் எதையும் செய்யாமல் விட்டுவிடவில்லை" என்றார்.