தான் விஞ்ஞானியாக விரும்புவதாகக் கூறிய மாணவியிடம், அவரை அடுத்த மாதம் இஸ்ரோவிற்கு அழைத்துச் செல்வதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி உறுதியளித்துள்ளார்.


அமேதி தொகுதியின் எம்.பியும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி ராணி அமேதி தொகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தை இன்று திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது மாணவர்களின் படிப்பிற்காக டேப்லெட்டை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது, அங்கு வந்திருந்த ஜகதீஸ்பூரைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவியான நீது மவுரியாவிடம் எதிர்கால திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்.




அதற்கு அந்த மாணவி  தான் விஞ்ஞானியாக விரும்புவதாகவும், தேசிய விண்வெளி நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புவதாகவும் கூறினார். இதனைக் கேட்டு ஆச்சர்யமடைந்த அமைச்சர் ஸ்மிருதி ராணி, அடுத்த மாதம் இஸ்ரோவிற்கு அழைத்துச் செல்வதாக அந்த மாணவியிடம் உறுதியளித்தார். இது குறித்து பேசிய அமைச்சர் ஸ்மிருதி ராணி, “அந்த மாணவி விஞ்ஞானியாக வேண்டும் என்றும், இஸ்ரோவிற்குச் செல்லவேண்டும் என்றும் விரும்புகிறார். அவரை அடுத்த மாதம் இஸ்ரோவிற்கு அழைத்துச் செல்வேன்” என்று கூறினார். மேலும், மாணவர்களின் வெற்றிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவேன் என்று அமைச்சர் உறுதியளித்தார்.










மாணவி ஒருவர் விஞ்ஞானியாக விரும்புவது அமேதிக்கு பெருமையான ஒன்று. அந்த மாணவி ஒருநாள் அமேதிக்கு பெருமையைத் தேடித்தருவார் என்று பாஜக தலைவர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். 


கல்வியை மேம்படுத்த மாணவ, மாணவிகளுக்கு ஒரு கோடி ஸ்மார்ட் ஃபோன் மற்றும் டேப்லட்கள் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். இத்திட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி வைத்தார். திட்டம் தொடங்கிய நான்கு மாதங்களில் அமேதி தொகுதியில் மட்டும் 11,672 மாணவ, மாணவிகளுக்கு டேப்லெட்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.