பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரிய வழக்கில் மத்திய அரசு இன்று மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.


பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு கடந்த முறை நாகேஸ்வர ராவ், கவாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது,  பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு அக்கறைக் காட்டவில்லை என்று குற்றம்சாட்டிய நீதிபதிகள் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ள பேரறிவாளனின் நன்னடத்தை, உடல்நிலை, அதிகாரப் பிரச்சனையை கருத்தில் கொண்டு பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக்கூடாது? என்று கேள்வி எழுப்பியதோடு, இவ்விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை என்றால் நாங்கள் முடிவெடுக்க வேண்டியிருக்கும் என்று கூறி வழக்கின் விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.


இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குடியரசுத் தலைவர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு முன்பு இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது.




ஆளுநர் தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் நடராஜ் ஆஜரானார். பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக மேலும் சில வாதங்களை முன்வைக்க விரும்புவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூற, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக மத்திய அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.


ஆளுநர் சார்பில் மத்திய அரசு ஆஜராகுவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளியுங்கள். ஆளுநருக்காக மாநில அரசு வாதிட
வேண்டுமே தவிர ஒன்றிய அரசு வாதிடக் கூடாது. 


பேரறிவாளன் மனு மீது ஆளுநர் முடிவெடுப்பார் என்றும், மாநில அரசின் முடிவு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருக்கும்போது ஆளுநர் குடியரசுத் தலைவரிடம் முறையிடலாம்  மத்திய அரசு வழக்கறிஞர்  நடராஜ் வாதிட்டார்.


பேரறிவாளன் மனு மீது உத்தரவு பிறப்பிக்க ஆளுநர் தொடக்கத்தில் மறுத்துவிட்டார். அதன்பின் 2 அல்லது 3 ஆண்டுகளாக  முடிவெடுக்கவில்லை; ஆளுநர் முடிவெடுக்காமல் பல ஆண்டுகள் காலம் தாழ்த்தியது தொடர்பாக என்ன கூற விரும்புகிறீர்கள்? விடுதலை தொடர்பாக நாங்கள் முடிவெடுக்க முடிவு செய்தபோது குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளீர்கள். கிரிமினல் வழக்குகளில் மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று மத்திய அரசு கூறுவது போல் உள்ளது. ஆளுநர் முடிவு மாநில அரசின் முடிவுக்குள் வருகிறது; குற்றவாளிகளுக்கான கருணை அல்லது நிவாரணம் வழங்குவது மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வருகிறது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். 



ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு முழுமையாக கட்டுப்பட்டவர்; பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு தலையிட்ட பின்னரே குழப்பம் தொடங்கியது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.


ஐபிசியின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பான கருணை மனுக்கள் மீது ஜனாதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு தரப்பு கூற, அப்படியானால் 70 ஆண்டுகளாக ஆளுநர் அளித்த தண்டனைக் குறைப்பு, அரசியல் சட்டத்திற்கு எதிரானதா? ஆயிரக்கணக்கான உத்தரவுகளை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு எண்ணுகிறதா? என்று நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.


பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசின் கருத்து மட்டுமே தேவை; ஒப்புதல் தேவையில்லை என்றும், இவ்விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.


அமைச்சரவை முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? கடந்த முறை 2 முடிவுகளைத் தேர்வு செய்யக்கூறினோம், ஏதேனும் முடிவு செய்யப்பட்டதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்ப, பேரறிவாளனை விடுவிக்கக் கோரிய வழக்கில் ஆளுநரின் முடிவு தொடர்பான ஆவணத்தின் நகல் சமர்ப்பிக்கப்பட்டது.


ஒரு நபரை விடுவிக்கவோ, விடுவிக்க மறுக்கவோ ஆளுநர் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது; அமைச்சரவை முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பும் போது அதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஆளுநர் செலுத்த முடியாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக நீதிமன்றத்தில் தனது வாதத்தை வைத்துள்ளது.


மேலும், ஆளுநரின் செயல்பாடு கூட்டாட்சி தத்துவத்தின் அடிபப்டையை அழிக்கும் வகையில் உள்ளது. பேரறிவாளன் மனுவை குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்ப முடியாது; குடியரசுத் தலைவரை தொடர்புபடுத்தவும் முடியாது; தனக்கான கடமையை செய்யத் தவறியதோடு தேவையில்லாமல் குடியரசுத் தலைவரை இழுத்துவிட்டிருக்கிறார் ஆளுநர்; அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் தருவது ஆளுநரின் வேலை; அதை உடனே செய்யாமல் கிடப்பில் போட்டிருக்கிறார் ஆளுநர்; பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவை ஏற்காமல் மிகப்பெரிய அரசியல் பிழையை ஆளுநர் செய்துவிட்டார் என்று தமிழ்நாடு அரசு கடுமையான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் எடுத்துவைத்திருக்கிறது.


மத்திய அரசுத் தரப்பு, தமிழ்நாடு அரசு மற்றும் பேரறிவாளன் தரப்பு தங்கள் வாதங்களை காரசாரமாக எடுத்து வைத்திருந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இவ்வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.