மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை (WCD) அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்றைய தினம், மாதவிடாய் என்பது ஒரு "குறைபாடு" அல்ல என்றும், ஊதியத்துடன் கூடிய விடுமுறை தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். மாதவிடாய் காலங்களில் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இவ்வாறு கூறியுள்ளார்.
மாதவிடாய் காலங்களில் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இது குறித்து மக்களிடம் தொடர்ச்சியாக விழிப்புணர்வு எற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பிரச்சனைகள் தீர்ந்தபாடு இல்லை. மாதவிடாய் நாட்களில் வீட்டு வேலையும் செய்து விட்டு அலுவலகத்திலும் அயராது உழைத்து வருகின்றனர். இதனால் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சில அலுவலகங்கள் இதனை அமல்படுத்தியுள்ளனர்.
நேற்று மாநிலங்களவையிலும் மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உறுப்பினர் மனோஜ் குமார் ஜா இது குறித்து மத்திய அரசுக்கு கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, "பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது" என பதிலளித்துள்ளார்.
மேலும், "மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு குறைபாடு அல்ல. அது பெண்களின் வாழ்வில் இயல்பானது, மாதவிடாயை சந்திக்கும் ஒரு பெண்ணாகவே இதை கூறுகிறேன். குறைந்த அளவிலான பெண்களே கடுமையான மாதவிடாய் வலியால் பாதிக்கப்படுகிறார்கள். அது பெரும்பாலும் மருந்துகள் மூலம் சரிசெய்யக்கூடியவையே. பெண்களுக்கு பணியிடங்களில் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவது தேவையற்றது" என கூறியுள்ளார்.
கடந்த வாரம், காங்கிரஸ் எம்பி சசி தரூர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஸ்மிருதி இரானி, "அனைத்து பணியிடங்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் இல்லை" என்று மக்களவையில் குறிப்பிட்டு பேசினார்.
மேலும், மனோஜ் குமார் ஜா சானிட்டரி நாப்கின்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சில பொருட்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும், இந்த தயாரிப்புகளை நிர்வகிக்கும் விதிமுறைகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஸ்மிருதி இரானி, ஜன் ஔஷதி கேந்திரா மூலம் மலிவு விலையில் சானிட்டரி நாப்கின்கள் கிடைப்பதை எடுத்துக்காட்டி, “10,000 ஜன் ஔஷதி கேந்திரா மூலம், 1 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின்கள் கிடைக்கின்றன, இதுவரை இதில் எந்த புகாரும் இல்லை” என தெரிவித்தார். மேலும், சுகாதாரப் பொருட்களை (சானிட்டரி நாப்கின்) அப்புறப்படுத்துவது குறித்து, ஸ்மிருதி இரானி கூறுகையில், 2014 ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி ஆட்சியில், ஜல் சக்தி அமைச்சகம் சுகாதாரப் பொருட்களின் மேலாண்மைக்கான தேசிய மற்றும் மாநில நெறிமுறைகள் கட்டமைக்கப்பட்டு, அதன்படி செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
Parliament Security Breach: நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு.. அவையில் விவாதிக்க காங்கிரஸ் நோட்டீஸ்..