கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2020 ஆம் உலகநாடுகளை பெரும் துயருக்கு ஆளாக்கிய கொரோனா தொற்றை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவி மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியது.
மார்ச் மாதம் தொடங்கி கிட்டதட்ட 5 மாதங்களுக்கும் மேலாக முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள், மாஸ்க் கட்டாயம், பொருளாதார இழப்பு என பல இன்னல்களை மக்கள் சந்தித்தனர். இந்த பிரச்சினை அத்தோடு தீர்ந்து விட்டதா என்றால் அதுதான் இல்லை. 2021 ஆம் ஆண்டு 2.0 வெர்ஷன் போல மீண்டும் மே மாதத்தில் கொரோனா பரவ தொடங்கியது. முதல் தடவை கிடைத்த அனுபவத்தில் மக்கள் சுதாரித்து கொண்டனர். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகைகளை எடுத்து ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என அனைத்திலும் இருந்து விரைவில் வெளியே வந்தனர்.
கொரோனா தொற்று 90% குறைந்து விட்டதாக கூறப்பட்டாலும் மீதமுள்ள 10% தொற்று ஆங்காங்கே உருமாறி பரவி தான் வருகிறது. முன்பை போல பாதிப்பு இல்லை என்றாலும் அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை என்றே சொல்லலாம். இதனிடையே கடந்த சில நாட்களாக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இரண்டு கொரோனா தொற்றுகளின் போதும் கேரளா மாநிலம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை சந்தித்திருந்தது.
கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பானது தற்போது 3 இலக்கங்களில் பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கூட 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை கேரளாவில் 949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவலை தடுக்க மாநில சுகாதாரத்துறை கடுமையான நடவடிக்கைகளை கையாள தொடங்கியுள்ளது.
தற்போது சபரிமலை சீசன் என்பதால் இந்தியா முழுவதும் இருந்து ஐயப்ப பக்தர்கள் கேரள மாநிலத்திற்கு அதிகளவும் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் பள்ளி அரையாண்டு விடுமுறை வருவதால் குடும்பத்துடன் கேரளாவுக்கு சுற்றுலா வருபவர்களும் அதிகம் என்பதால் அரசு நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.