மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சமீபத்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நிர்வாகக் கல்வி குறித்த பட்டப்படிப்பை முடித்துள்ளார். கடந்த பிப்ரவரி 20 அன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது படிப்பை முடித்த சான்றிதழைப் பதிவிட்டுள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. `Business Analytics: Decision Making Using Data’ என்று நிர்வாக மேலாண்மை குறித்த படிப்பை அவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் திறந்த வெளிக் கல்வியின் மூலம் பயின்றுள்ளார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம், லிங்கெட்இன் முதலான சமூக வலைத்தளங்களின் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, `என் வாழ்வின் மையப்புள்ளியே அனைவருக்கும் பயன்படுமாறு இருப்பது.. என் யதார்த்தங்களை மகிழ்ச்சியுடன் வாழ்வதும், கல்வி கற்பதும் என் பணியாக இருந்திருக்கிறது.. வாழ்வதையும், கற்பதையும் அனுபவமாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.. இந்த முறை கேம்ப்ரிட்ஜ் வணிகவியல் பள்ளியுடன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்மிருதி இரானி கடந்த ஆண்டு தன்னுடைய முதல் புத்தகத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட்லாண்ட் புக்ஸ் வெளியிட்டுள்ள `லால் சலாம்’ என்ற இந்தப் புத்தகத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் போது சத்திஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்கள் அதிகம் உள்ள தண்டேவாடா பகுதியில் மத்திய ரிசர்வ் படையினர் 76 பேர் கொல்லப்பட்டது குறித்த கதையாக இந்தப் புத்தகம் உருவாகியுள்ளது.
கடந்த வாரம், மணிப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அங்குள்ள பாரம்பரிய நடனக் கலைஞர்களுடன் இணைந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.