மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் மகள் கோவால் முறைகேடாக லைசன்ஸ் பெற்று மதுபான பார் நடத்தி வருவது தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் பெயரில் லைசன்ஸ்:
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் மகள் ஸோய்ஸ் ராணி. இவர் கோவாவில் உள்ள அஸ்ஸாகவோ பகுதியில் ரெஸ்டாரண்ட் மற்றும் அதனுடன் சேர்ந்த சொகுசு மதுபானவிடுதியும் நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த மதுபான விடுதி தான் தற்போது சிக்கலில் மாட்டியிருக்கிறது. இந்த மதுபான விடுதியின் உரிமம் முடிவடைந்ததையடுத்து, கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி உரிமத்தை புதுப்பிப்பதற்காக அந்தோணி காமா என்ற பெயரில் விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு ரெஸ்டாரண்ட்டுக்கான உரிமமும் புதுப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அந்தோணி காமா கடந்த 2021 மே மாதம் 17ம் தேதியே உயிரிழந்துவிட்டார். உயிரிழந்தவரின் பெயரில் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்து ரெஸ்டாரண்ட் நடத்தி வந்தது தெரியவந்தது.
சிக்கலில் சுங்கவரித்துறை:
இதனையடுத்து வழக்கறிஞர் ஏரிஸ் ரோட்ரிகஸ் என்பவர் ரெஸ்டாரண்ட் நடத்த ஆவணங்கள் திரிக்கப்பட்டு போலியான ஆவணங்கள் மூலம் லைசன்ஸ் பெறப்பட்டுள்ளதாக கோவாவின் சுங்கவரித்துறை ஆணையர் நாராயணன் எம் காட்டிடம் புகார் அளித்ததையடுத்து, சில்லி சோல்ஸ் கஃபேவிற்கு கடந்த ஜூலை 21ம் தேதி ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரமானது வரும் ஜூலை 29ம் தேதி விசாரணைக்கு வருகிறது. உரிமம் பெற்றுள்ள பெயரான அந்தோணி காமா அவரது ஆதார் அட்டையை டிசம்பர் 2020ல் தான் பெற்றுள்ளார். இவர் மும்பையின் விலீ பார்லே பகுதியைச் சேர்ந்தவராவார். இவர் இறந்ததற்கானச் சான்றிதழை மும்பை மாநகராட்சி வழங்கியிருப்பது இந்த குற்றச்சாட்டை உறுதிபடுத்தியிருக்கிறது.
இது குறித்து விளக்கமளித்துள்ள சுங்கவரித்துறை அலுவலகம், “உரிமம் புதுப்பிப்பதற்கானப் படிவத்தில், உயிரிழந்தவர் சார்பாக வேறு ஒருவர் கையொப்பமிட்டுள்ளார். அதில் தயவு செய்து இந்த உரிமத்தை 2022-2023ம் ஆண்டுக்கு புதுப்பியுங்கள். இந்த உரிமத்தை ஆறு மாதங்களுக்குள் மாற்றிக்கொள்கிறேன்” என்று அந்த படிவத்தில் கூறியிருந்ததாக சுங்கவரி அலுவலகம் கூறியுள்ளது.
விரிவான விசாரணைக்கு வலியுறுத்தல்:
இறந்தவர் பெயரில் முறைகேடாக உரிமம் பெற்று ரெஸ்டாரண்ட் மற்றும் மதுபான விடுதி நடத்துவதை வழக்கறிஞர் ரோட்ரிகஸ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றுள்ளார். சுங்கவரித்துறை அதிகாரிகள் மற்றும் அஸ்ஸாகோ பஞ்சாயத்து அதிகாரிகள் உதவியுடன், மத்திய அமைச்சர் குடும்பம் செய்துள்ள இந்த முறைகேடு மீது விரிவான விசாரணை நடத்தவேண்டும் என்று வழக்கறிஞர் ரோட்ரிகஸ் வலியுறுத்தியுள்ளார்.
உரிமம் இல்லாமல் ரெஸ்டாரண்ட்:
அதே நேரம், “ஸ்மிருதி ராணி மகள் நடத்தும் சில்லி சோல்ஸ் கஃபே மற்றும் மதுபான விடுதியில் உள்ள ரெஸ்டாரண்டுக்கு, கோவாவில் இயங்குவதற்கான உரிமமே கிடையாது. சுங்கவரி அதிகாரிகள் விதிகளை வளைத்து வெளிநாட்டு மது மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு மதுக்களை விற்பனை செய்ய உரிமம் வழங்கியுள்ளது. சுங்கவரித்துறை விதிகளின் படி ஏற்கனவே அங்கு இயங்கும் ரெஸ்டாரண்ட்டுக்கு மட்டுமே மதுபானம் விற்பதற்கும், மதுபான விடுதி நடத்தவும் உரிமம் வழங்க வேண்டும்” என்று ரோட்ரிகஸ் கூறியுள்ளார்.