மேற்கு வங்க ஆளுநரான ஜகதீப் தன்கர், ஆளும் பாஜகவின் வேட்பாளராக இருக்கும் குடியரசு துணை தலைவர் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று மம்தா பானர்ஜியின் கட்சி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.


வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி, குடியரசு துணை தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இதில், எதிர்கட்சி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா களமிறக்கப்பட்டுள்ளார். குடியரசு தலைவர் தேர்தலிலேயே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிர்கட்சிகளான சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.


இது, எதிர்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இச்சூழலில், குடியரசு துணை தலைவர் தேர்தலில் மம்தாவின் திரிணாமூல் வாக்களிக்க போவதில்லை என அறிவித்திருப்பது எதிர்க்கட்சி ஒற்றுமைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. 


குடியரசு துணை தலைவர் தேர்தல் குறித்து பேசிய மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, "தங்கருக்கோ மார்கரெட் ஆல்வாவுக்கோ ஆதரவு அளிக்க போவதில்லை என கட்சி ஒருமனகாக முடிவெடுத்துள்ளது. பாஜக கூட்டணி வேட்பாளரை ஆதரிப்பது குறித்த பேச்சுக்கு இடமே இல்லை. இரு அவைகளிலும் 35 எம்பிக்கள் உள்ள ஒரு கட்சியுடன் முறையான ஆலோசனை இல்லாமல் எதிர்க்கட்சி வேட்பாளரை முடிவு செய்த விதம், வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்" என்றார்.


கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்குவங்க ஆளுநராக உள்ள தங்கர், மம்தாவுடன் தொடர் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். பாஜகவின் தூண்டுதலின் பேரில் ஆளுநர் தங்கர், மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதாக மம்தா குற்றம் சாட்டியிருந்தார். இதன் காரணமாக, அவர் குடியரசு துணை தலைவராக ஆவது மம்தாவுக்கு சற்று நிம்மதி பெருமூச்சு அளிக்கலாம். 


இதற்கு மத்தியில்தான், மம்தாவின் ஆதரவை தங்கர் கோரியுள்ளார். டார்ஜிலிங்கில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அந்த ஆலோசனையில், அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்து கொண்டுள்ளார். பெரும்பாலான திரிணாமூல் எம்பிக்கள், எதிர்கட்சி வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக மம்தா விளக்கம் அளித்துள்ளார்.


வரும் 2024ஆம் ஆண்டு, மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், குடியரசு தலைவர் தேர்தலில் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைத்ததில் மம்தாவுக்கு பெரும் பங்கு உண்டு.


இப்படியிருக்க, குடியரசு துணை தலைவர் தேர்தலில் மம்தா எதிர்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிக்காமல் இருப்பது பாஜகவுக்கு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண