S P Singh Baghel: ஒரே நாளில் மத்திய சட்டத்துறை அமைச்சகத்தில் அடுத்தடுத்து அதிரடி.. மத்திய இணையமைச்சரும் மாற்றம்...!

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சராக பதவி வகித்த எஸ் பி சிங் பாகேல், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Continues below advertisement

மத்திய சட்டத்துறை அமைச்சகத்தில்  அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலில், கேபினட் அந்தஸ்தில் இருந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவிடம் இருந்து சட்டம் மற்றும் நீதித்துறை பறிக்கப்பட்டு புவி அறிவியல் துறை வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சராக பதவி வகித்த எஸ். பி. சிங் பாகேல், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  

Continues below advertisement

மத்திய அரசு vs நீதித்துறை:

கடந்த 2014ஆம் ஆண்டு, மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக, நீதிபதிகள் நியமன விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்யும் நீதிபதிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதில்லை என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

கொலீஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது. 

இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே சுமூகமான சூழல் நிலவவில்லை. இந்த சூழலில்தான், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பல்வேறு முக்கிய அமைச்சகங்களை வகித்து வந்தவருமான ரவிசங்கர் பிரசாத்திடம் இருந்த மத்திய சட்டத்துறை கிரண் ரிஜிஜூவுக்கு அளிக்கப்பட்டது.

இதன்பிறகு, நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நிலவும் பிரச்னை தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதன் பிறகுதான், நீதித்துறையும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் நேரடியாக விமர்சித்து கொண்டனர். கொலீஜியம் அமைப்பு வெளிப்படை தன்மையற்று இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஒரே நாளில் மத்திய சட்டத்துறை அமைச்சகத்தில் அடுத்தடுத்து அதிரடி:

கடந்த பிப்ரவரி மாதம், நீதிபதிகள் நியமன விவகாரத்தில், கவலை தெரிவித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, "இது சீரியசான விஷயம். மத்திய சட்டத்துறை அமைச்சர் இப்படி பேசியிருக்கக் கூடாது. எங்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளோம்" என கூறியது.

இப்படி, இரு தரப்பும் மாறி மாறி பரஸ்பரம் விமர்சித்து கொண்ட நிலையில், நீதித்துறை, மத்திய அரசுக்கு இடையேயான பிரச்னை தொடர்ந்து கொண்டே வந்தது. இச்சூழலில்தான், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சரான அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு கூடுதலாக மத்திய சட்டத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, மத்திய சட்டத்துறையின் இணையமைச்சரும் மாற்றப்பட்டுள்ளார். உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த எஸ். பி. சிங் பாகேல், அக்ரா மக்களவை தொகுதி உறுப்பினராவார்.

Continues below advertisement