ஒரு குடிகார அதிகாரியை விட ரிக்ஷாக்காரன் அல்லது கூலித் தொழிலாளிக்கு பெண்களை திருமணம் செய்து கொடுத்தால் வாழ்க்கை சிறக்கும் என்று பேசிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கவுஷல் கிஷோர், 'குடிகாரர்களுக்கு தங்கள் மகள்கள் மற்றும் சகோதரிகளை திருமணம் செய்து வைக்க வேண்டாம்' என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மகன் போதையால் மரணம்
சனிக்கிழமையன்று லம்புவா சட்டமன்றத் தொகுதியில் போதைக்கு அடிமையாதல் குறித்த நிகழ்ச்சியில் உரையாற்றும் போது, “குடிகாரனின் ஆயுட்காலம் மிகக் குறைவு,” என்று கிஷோர் பேசினார். தனது தனிப்பட்ட அனுபவத்தை விவரித்த அவர், “எம்.பி.யாக இருந்த நானும், எம்.எல்.ஏ.வாக இருந்த எனது மனைவியும் எங்கள் மகனின் உயிரைக் காப்பாற்ற முடியாத நிலையில், பொது மக்கள் எப்படி காப்பாற்றுவார்கள்” என்றார். “என் மகன் (ஆகாஷ் கிஷோர்) தன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் பழக்கத்தில் இருந்தான். போதை ஒழிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அந்த கெட்டப் பழக்கத்தை விட்டுவிடுவார் என்று கருதி, ஆறு மாதங்களுக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், அவர் தனது திருமணத்திற்குப் பிறகு மீண்டும் குடிக்கத் தொடங்கினார், அது இறுதியில் அவரது மரணத்திற்கு வழிவகுத்தது", என்று கூறினார்.
மனைவி விதவை
மேலும் கௌஷல் கிஷோர் கூட்டத்தில், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 19 அன்று, ஆகாஷ் இறந்தபோது, அவனுக்கு பிறந்த மகனுக்கு இரண்டு வயதுதான். என்னால் என் மகனைக் காப்பாற்ற முடியவில்லை, அதனால் அவன் மனைவி விதவையானாள். இதிலிருந்து உங்கள் மகள்களையும் சகோதரிகளையும் காப்பாற்ற வேண்டும்", என்று மத்திய அமைச்சர் வருத்தத்தோடு கூறினார்.
குடிகாரனுக்கு பெண் கொடுக்காதீர்கள்
"இதனால் ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது. யாரும் ஒரு குடிகாரர் எவ்வளவு நல்ல வேலையில் இருந்தாலும் அவருக்கு தங்கள் வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொடுக்காதீர்கள், அவர்களை விட ரிக்ஷாகாரர், கூலித்தொழிலாளி நன்றாக பார்த்துக்கொள்வார்கள். சுதந்திர இயக்கத்தில், 90 ஆண்டுகளில் 6.32 லட்சம் பேர் ஆங்கிலேயர்களுடன் போரிட்டு தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தனர், அதே நேரத்தில் போதைப் பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் பேர் இறக்கின்றனர்" என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
போதையில்லா மாவட்டமாக மாற்ற பிரசாரம்
உத்திரபிரதேசத்தில் உள்ள மோகன்லால்கஞ்ச் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யான அவர் இரு வருடம் முன்பு தனது மகனை இழந்தார். அவர் மேலும் கூறுகையில் 80 சதவீத புற்றுநோய் இறப்புகள் புகையிலை, சிகரெட் மற்றும் ‘பீடி’க்கு அடிமையாவதால்தான் ஏற்படுகிறது என்றார். போதை ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக பார்வையாளர்கள் மற்றும் பிற அமைப்புகளை அவர் அதிலிருந்து மீள வலியுறுத்தினார். மேலும் அவர்களின் குடும்பங்களை காப்பாற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். மாவட்டத்தை போதையில்லா மாவட்டமாக மாற்ற போதை ஒழிப்பு பிரச்சாரத்தை அனைத்து பள்ளிகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், காலை தொழுகையின் போது குழந்தைகளுக்கு இது தொடர்பான அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கவுஷல் கிஷோர் கூறினார்.