கட்சியை வலுப்படுத்தும் பணிகளின் ஒரு பகுதியாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாளை தமிழ்நாடு வருகை தருகிறார்.
தமிழ்நாடு, ஒடிசா பயணம்
நேற்று மறைந்த முன்னாள் பிரதமரும் பாஜக தலைவருமான வாஜ்பாயின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்ட நிலையில், அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி இதனைத் தெரிவித்தார்.
தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநிலங்களில் கட்சியை வளர்க்க பாஜக முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், இந்த இரு மாநிலங்களுக்கும் 27, 28ஆம் தேதிகளில் நட்டா வருகை தர உள்ளார்.
மேலும், 2024 மக்களவைத் தேர்தலுக்காக நீலகிரி, கோவையில் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகள் தொடர்பாக ஜே.பி.நட்டா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
நீட்டிக்கப்படும் பதவிக்காலம்?
ஜே பி நட்டாவின் பதவிக்காலம் விரைவில் வரும் ஜனவரியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என முன்னதாககத் தகவல்கள் வெளியாகின.
பாஜக விதிகளின்படி, தலைவருக்கு மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை அதாவது 6 ஆண்டுகள் தலைவராக பதவி வகிக்காலம். இந்நிலையில், வரும் 2024ஆம் ஆண்டு, மக்களவை தேர்தல் வரை, நட்டா தலைவராக பதவி வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது தற்போதைய பதவிக்காலத்தை நீட்டிக்கும் வகையில் அடுத்த மாதம் கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
பாஜகவை பொறுத்தவரை, தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்த வேண்டும். ஆனால், தற்போது வரை தேர்தல் நடத்தப்படாத காரணத்தால் அவரின் தற்போத பதவிக்காமல் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அடுத்த மாதம், பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெறலாம் எனக் கூறப்படும் நிலையில், அதில், பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலில் பின்பற்ற வேண்டிய வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.