இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறைகள் 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023ஆம் ஆண்டில் 73% குறைந்துள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இடதுசாரி தீவிரவாதம் குறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், "இடதுசாரி தீவிரவாத பிரச்னையை எதிர்கொள்ள, "தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம்"க்கு கடந்த 2015ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள், வளர்ச்சி தலையீடுகள், உள்ளூர் சமூகங்களின் உரிமைகளை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய பல்முனை உத்திகள் இதில் அடக்கம்.
இடதுசாரி தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி:
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய ஆயுதக் காவல் படைகள், மாநில காவல் படைகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள், உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, பலப்படுத்தப்பட்ட காவல் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான பயிற்சி மற்றும் நிதி ஆகியவற்றை மத்திய அரசு வழங்குகிறது.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், சாலைக் கட்டமைப்பை விரிவுபடுத்துதல், தொலைத் தொடர்பு இணைப்பை மேம்படுத்துதல், திறன் மேம்பாடு, நிதி உள்ளாக்கம் போன்ற குறிப்பிட்ட முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இடதுசாரி தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான ஒட்டுமொத்த உத்தியில் நிதி முடக்கம் ஒரு முக்கிய பகுதியாகும். இடதுசாரி தீவிரவாதத்திற்கு நிதி ஆதாரங்கள் குறைந்து வருவதை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில முகமைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு பரபர தகவல்:
இடதுசாரி தீவிரவாதத்துக்கு எதிராக மத்திய அளவிலும், பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு இடையிலும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மத்திய அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் (2019-20 முதல் 2023-24 வரை), இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் திறன் மேம்பாட்டுக்காக சிறப்பு உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.4350.78 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தொடர்பான செலவினம் (SRE) மற்றும் சிறப்பு மத்திய உதவி (SCA) திட்டங்கள் மேலும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் முக்கியமான கட்டமைப்புகளை நிவர்த்தி செய்யவும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் முக்கியமான கட்டமைப்புகளை சீரமைக்கவும் கடந்த 05 ஆண்டுகளில் (2019-20 முதல் 2023-24 வரை) மத்திய முகமைகளுக்கு ரூ.560.22 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2018 ஏப்ரலில் 126 மாவட்டங்களிலிருந்து 90 மாவட்டங்களாகவும், 2021 ஜூலையில் 70 மாவட்டங்களாகவும், பின்னர் 2024 ஏப்ரலில் 38 மாவட்டங்களாகவும் குறைந்துள்ளது.
இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறைகள் 2010-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ம் ஆண்டில் 73% குறைந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.