நாடாளுமன்றத்தில் ஆளும் பாஜக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ரோஜா பூவையும் மூவர்ண கொடியையும் கொடுத்து வரவேற்றுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்கள் காரணமாக ஆளும் பாஜக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. அமளி காரணமாக இரு அவைகளும் முடங்கியுள்ளது.
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி:
அதானி விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல, உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஜார்ஜ் சொரோஸின் அறக்கட்டளைக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கும் தொடர்பு இருப்பதாக கூறி நாடாளுமன்றத்தில் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜார்ஜ் சொரோஸ், இந்திய நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் பாஜக எம்பிக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதை தவிர, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரை நீக்கும் நோக்கில் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது இந்தியா கூட்டணி.
குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி:
இப்படி, அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதானி விவகாரத்தை முன்வைத்து பாஜக எம்பிக்களுக்கு ரோஜா பூ மற்றும் மூவர்ண கொடி அளித்து காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்திற்கு காரில் வந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு காங்கிரஸ் எம்பி ஒருவர் ரோஜா பூ மற்றும் மூவர்ண கொடி அளிக்க முயற்சிக்கிறார். ஆனால், அதை அவர் ஏற்க மறுக்கிறார்.
இந்த சூழலில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வந்து, ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூவையும் மூவர்ண கொடியையும் கொடுத்தார். அதை அவர் ஏற்று கொண்டார். இதை பார்த்த கரூர் எம்பி ஜோதிமணியும் மயிலாடுதுறை எம்பி சுதாவும் சிரித்தனர். இந்த சம்பவம் மற்ற எம்பிக்கள் மத்தியிலும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க: Google Search 2024: கதறிய கூகுள்- மாங்காய் ஊறுகாய், ஹனுமன், ஹர்திக் என தேடி திரிந்த இந்தியர்கள் - பிரதமர் மோடி எங்கப்பா?