கடந்த 2014ஆம் ஆண்டு, பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இதுவரை ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் எல்லாம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கோட்டையாக கருதப்பட்ட அஸ்ஸாம், இடதுசாரிகளின் கோட்டையாக கருதப்பட்ட திரிபுரா என பல்வேறு  மாநிலங்களில் முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியது.


பிரதமர் மோடியின் தலைமையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலுமே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. பாஜகவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரமிக்க அமைப்பாக இருந்த கட்சியின் நாடாளுமன்ற குழு தற்போது பெயரளவில் மட்டுமே முடிவுகளை எடுப்பதாகக் கூறப்படுகிறது. 


கட்சி கடந்து பிரபலமாக இருக்கும் நிதின் கட்கரி:


தேர்தல் தொடங்கி அமைப்பு வரை அனைத்து முடிவுகளையுமே மோடியும் அமித் ஷாவும் எடுப்பதாகக் கூறப்படுகிறது. கட்சியிலும் ஆட்சியிலும் அவர்களின் ஆதிக்கம்தான் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. மோடி, அமித் ஷா அளவுக்கு இல்லை என்றாலும், பாஜக ஆட்சியில் பிரபலமான அமைச்சராக இருப்பது நிதின் கட்கரி.


மோடி, அமித் ஷா போல் அல்லாமல் பல கட்சிகளை சேர்ந்த தலைவர்களுடன் நிதின் கட்கரி இனக்கமான உறவை கொண்டுள்ளார். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையை கவனித்து வரும் நிதின் கட்கரி, கட்சி கடந்து, எந்த வித பாகுபாடும் இன்றி செயல்பட்டு வருவதாக பல தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.


இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்திற்கு சாலை திறப்பு விழாவுக்காக சென்ற நிதின் கட்கரி, அடுத்தாண்டு மக்களவை தேர்தலுக்காக போஸ்டர் ஒட்ட மாட்டேன் என்றும் காசு தர மாட்டேன் என்றும் பேசியுள்ளார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "நான் உங்களுக்கு சேவை செய்திருக்கிறேன். நீங்கள் விரும்பினால் எனக்கு வாக்களியுங்கள். நீங்கள் விரும்பவில்லை என்றால் வேண்டாம்.


"பணம் கொடுக்கமாட்டேன்"


அடுத்த மக்களவை தேர்தலுக்காக பேனர்கள், போஸ்டர்கள் ஒட்ட மாட்டேன். பணம் கொடுப்பதில்லை என முடிவு செய்துள்ளேன். நீங்கள் லட்சுமி தேவியின் தரிசனத்தைப் பெற மாட்டீர்கள். உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானம் உங்களுக்குக் கிடைக்காது. நான் ஊழலில் ஈடுபடமாட்டேன். உங்களையும் அதில் ஈடுபட விடமாட்டேன்" என்றார்.


கடந்த வியாழக்கிழமை, தனது துறை அமல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பேசிய அவர், "இந்த ஆண்டு இறுதிக்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் பள்ளங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான கொள்கையை அரசு உருவாக்கி வருகிறது. இதுபோன்ற திட்டங்கள் சிறப்பாக பராமரிக்கப்படுவதால், பில்ட்-ஆபரேட்-ட்ரான்ஸ்ஃபர் (பிஓடி) மாதிரியைப் பயன்படுத்தி சாலைகள் கட்டுமானத்தை மேற்கொள்ள விரும்புகிறேன்" என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் முறையில் கட்டப்படும் சாலைகளுக்கு சீக்கிரமே பராமரிப்பு தேவைப்படுகிறது. அதேசமயம், பிஓடி முறையில், அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கு ஏற்படும் பராமரிப்பு செலவு எவ்வளவு என்பது ஒப்பந்தக்காரருக்குத் தெரியும் என்பதால் சாலைகள் சிறப்பாக உருவாக்கப்படுகின்றன" என்றார்.