கர்நாடக மாநிலம், பெங்களூரு ஜே.பி.நகர் பகுதியில் உள்ள டால்மியா சர்க்கிள் அருகே மின்சார கார் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் காரில் இருந்து அதிகப்படியான நெருப்பு கரும்புகையை வெளிப்படுத்தியவாறு எரிகிறது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஆகவில்லை. காரினை இயக்கி வந்தவர் கவனமாக செயல்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் வீடியோவில் காரின் டயர் வெடிப்பது போன்று தெரிகிறது.
இந்த சம்பவம் மின்சார வாகனங்களின் (EV) பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. குறிப்பாக சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்படும் வீடியோவாக உள்ளதால் இணையவாசிகள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்த வரையில் மின்சார வாகனம் தீப்பிடிப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, புனேவில் ஓலா எலக்ட்ரிக் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது இதுபோன்று வைரலானது. அதன்பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதன் காரணமாக இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களின் விளைவாக, பல EV உற்பத்தியாளர்கள் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளனர். பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் மனித உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் காரணங்களாக கண்டறியப்படும் வாகனங்களை திரும்பப்பெற வேண்டும் என வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற விபத்துகள் மின்சார வாகனங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தரநிலைகள் உள்ளிட்ட முக்கியமான கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
பெங்களூருவில் ஏற்பட்ட மின்சார கார் தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும், இந்த சம்பவங்கள் EV துறையில் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளின் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றன என சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர். அதேபோல் மின்சார வாகனங்கள் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இதனால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கவும், இந்த வாகனங்களின் பாதுகாப்பு குறித்து நுகர்வோருக்கு உறுதியளிக்கவும் கடுமையான பாதுகாப்பு முறைகளையும் உற்பத்தியாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மின்சார வாகனங்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் தொடர்ந்து விரிவடைந்து வருவதால், உற்பத்தியாளர்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் மற்றும் பங்குதாரர்கள் பாதுகாப்பு குறித்த விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம். இது நுகர்வோர்களுக்கு பயனளிப்பது மட்டுமல்லாமல் சந்தையில் நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன், மின்சார வாகனங்களை அதிக அளவில் மக்கள் வாங்கவும் முன்வருவார்கள்.