லக்னோவில் உள்ள மோகன்லால்கஞ்ச் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் எம்பியும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணை அமைச்சருமான கவுஷல் கிஷோரின் மருமகன் நந்த் கிஷோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் மருமகன் தற்கொலை
லக்னோவின் பிகாரியா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கிடைத்துள்ள தகவலின்படி நந்த் கிஷோர் பிகாரிய பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், தற்போது தற்கொலைக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோரின் மருமகள் அங்கிதா கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தற்கொலைக்கு முயன்றபோது பெரும் சர்ச்சை கிளம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மருமகள் தற்கொலை முயற்சி
கடந்த வருடம் அங்கிதா தனது கையின் நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயற்சிக்கும் முன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது பெரும் சர்சைக்குள்ளாகி இருந்தது. அந்த ஆடியோவில் தனது கணவருக்கு அவர் செய்தி கூறியிருந்தார். தனது கணவர் ஆயுஷிடம், 'உன் அப்பா எம்.பி, அம்மா எம்.எல்.ஏ என்பதால் என்னால் யாருடனும் சென்று சண்டையிட முடிவதில்லை. நான் சொல்வதை யாரும் கேட்பதில்லை, இன்று வரை நான் உன்னை யாரையும் தொட விடவில்லை, நான் உன்னை எப்படி கொல்ல முடியும், நீ எவ்வளவு பொய் சொல்கிறாய், நீயும் உன் குடும்பமும் என்னை வாழ விடவில்லை", என்று கூறியிருந்தார்.
மருமகள் வெளியிட்டிருந்த ஆடியோ
ஆடியோவில் அங்கிதா மேலும் கூறுகையில், 'வீட்டு வாடகை கொடுக்கவில்லை, காஸ் சிலிண்டர் நிரப்பவில்லை, என்ன சாப்பிடுவேன் என்று ஒருமுறை கூட யோசிக்கவில்லை, நீங்கள் என்னோடு இல்லையென்றால் நான் ஏன் இங்கு தங்க வேண்டும்? நான் போகிறேன், நான் போகிறேன், நீங்கள் என்னை நினைவில் வைத்துக் கொள்வீர்கள், என்னை விட சிறந்தவரை நீங்கள் காண மாட்டீர்கள் என்று நினைப்பீர்கள். என் சாவுக்கு நீயும் உங்கள் குடும்பமும் தான் காரணம், நான் போகிறேன்’’ என்றார்.
லிவ்-இன் உறவை தவறு என்ற அமைச்சர்
மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர், ஷ்ரத்தா வாக்கர் வழக்கு தொடர்பாக தெரிவித்த கருத்து சர்சையானது குறிப்பிடத்தக்கது. அதுகுறித்து பேசுகையில், ”லிவ்-இன் உறவை தவறு என்று கவுஷல் கிஷோர் சிறுமிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது, பீகாரில் உள்ள கயா சென்றடைந்த மத்திய அமைச்சர் கவுஷல் கிஷோர், ஷ்ரத்தா கொலை வழக்கு குறித்து, 'இது தவறு, யாரும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழக்கூடாது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப் வாழும் பெண்களுக்கு கோர்ட் நோட்டிஸ் அனுப்ப வேண்டும். நீங்கள் ஒரு பையனுடன் வாழ விரும்பினால், முதலில் திருமணம் செய்து கொள்ளுங்கள். லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என்பது சில நாட்கள் நீடிக்கும் நட்பு, பின்னர் முறிந்துவிடும். பின்னர் பெண்கள் அழுத்தத்தை உருவாக்குகிறார்கள், அதன் பிறகு இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன", என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050