சர்வதேச அளவில் முக்கிய மினரல் வாட்டர் நிறுவனமாக பிஸ்லேரி உள்ளது. தண்ணீரை பேக்கேஜ் செய்து விற்று, உலகளவில் புகழ்பெற்ற நிறுவனமாக பிஸ்லேரி திகழ்கிறது. கடந்த பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வந்த அந்த நிறுவனத்தை விற்க அதன் உரிமையாளர் தற்போது முன் வந்துள்ளார்.
பிஸ்லேரி நிறுவனத்தை விற்க ஆட்களை தேடி வருவதாகவும் டாடா உள்பட பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் நிறுவனத்தின் உரிமையாளரும் மூத்த தொழிலதிபருமான ரமேஷ் சவுகான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் (டிசிபிஎல்) நிறுவனத்துடன் 7,000 கோடி ரூபாய் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக வெளியான செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிஸ்லேரி நிறுவனத்தை விற்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா? என பிடிஐ செய்தியாளர் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "ஆமாம். விற்க உள்ளோம்" என்றார். மேலும், பல குழுக்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
டாடா குழுமத்திற்கு விற்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து பேசிய அவர், "அது சரியான தகவல் அல்ல. இன்னும், பேச்சுவார்த்தை நடந்து வருகிறது" என்றார்.
பிஸ்லேரி நிறுவனத்தை ஏன் விற்கிறீர்கள் என கேட்டதற்கு, "யாராவது அதைக் கையாள வேண்டும். அதைப் பார்த்து கொள்ள வேண்டும். என் மகள் ஜெயந்திக்கு தொழிலை நடத்துவதில் ஆர்வம் இல்லை" என பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து பிஸ்லேரி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், "பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. மேலும் தகவலை வெளியிட முடியாது" என்றார்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்னர், தங்களுக்கு சொந்தமான குளிர்பான நிறுவனத்தை அமெரிக்காவின் கோக கோலா நிறுவனத்திற்கு சவுகான் விற்றார். கடந்த 1993ஆம் ஆண்டு, தம்ஸ் அப், கோல்ட் ஸ்பாட், சிட்ரா, மாஸா மற்றும் லிம்கா போன்ற பிராண்டுகளை அட்லாண்டாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கோக கோலா நிறுவனத்திற்கு விற்றார்.
அதில், தம்ஸ் அப் ஏற்கனவே பில்லியன் டாலர் பிராண்டாக மாறிவிட்டது. 2024ஆம் ஆண்டுக்குள், மாஸா நிறுவனமும் பில்லியன் டாலர் பிராண்டாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு, குளிர்பான சந்தையில் சவுகான் மீண்டும் நுழைந்தார். ஆனால், அவரால் பழையை வெற்றியை படைக்க முடியவில்லை.