ஏர் இந்தியா விமான நிறுவனத்தை சமீபத்தில்தான் டாடா குழுமம் வாங்கியது. இதையடுத்து, ஏர் இந்தியாவை உலக தரம் வாய்ந்த விமான நிறுவனமாக மாற்ற டாடா குழுமம் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரு காலத்தில், ஏர் இந்தியா நிறுவனம் என்றாலே அதன் விமான பணியாளர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். உலகின் தலைசிறந்த விமான பணியாளர்களில் அவர்களும் ஒருவர்.
இந்நிலையில், விமான பயணத்தின்போது என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது போன்ற வழிகாட்டுதல்கள் அடங்கிய விதிகளை தங்களின் விமான பணிக்குழுக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது. அதில், தங்களை எப்படி வெளிகாட்டி கொள்ள வேண்டும் போன்ற வழிகாட்டுதல்களும் அடங்கும்.
ஹேர் ஜெல் பயன்படுத்துவதை கட்டாயமாக்கியுள்ள ஏர் இந்தியா, வழுக்கை தலை கொண்ட ஆண் பணியாளர்கள், தலையை மொட்டையடித்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள், தலையை தினமும் மொட்டை அடித்து கொள்ள வேண்டும். மேலும், மற்ற விமான பணியாளர்கள் பின்பற்றும் முடி அலங்காரத்தை பின்பற்ற அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறுபுறம், முத்து ஆபரண காதணிகளை அணிய வேண்டாம் என பெண் விமான பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பணியின்போது அலங்கார வடிவில் இல்லாத தங்கம் அல்லது வைர வட்ட வடிவ காதணிகள் (முத்து இல்லை) மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0.5 செமீ அளவுக்குள் பொட்டு வைத்து கொள்ளலாம் என்றும் சேலை மற்றும் அலங்கார வடிவில் இல்லாத கல் பொறிக்கப்படாத வளையல்களை அணிந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முடியை மேல் ஏற்றியும் கீழ் இறக்கியும் கட்டக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல, நான்கு கருப்பு ஹேர் பின்கள் மட்டுமே ப.யன்படுத்த வேண்டும். ஐ ஷேடோ, லிப்ஸ்டிக், நெயில் பெயிண்ட் மற்றும் ஹேர் ஷேட் கார்டுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
நரைத்த முடி கொண்ட ஆண் மற்றும் பெண் பணியாளர்கள் இருவரும் கருப்பு நிற டை அடிக்க வேண்டும் என்று விமான நிறுவனம் கூறியுள்ளது. மருதாணி அனுமதிக்கப்படாது. மணிக்கட்டு, கழுத்து, கணுக்கால் ஆகியவற்றில் கருப்பு அல்லது மத கயிறு கட்ட அனுமதிக்கப்படாது.
ஒரு மாதத்திற்கு முன்பு முழுமையான வழிகாட்டுதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சீருடை வழிகாட்டுதல்களில் முக்கிய மாற்றங்களை அடிக்கோடிட்டுக் காட்டும் மற்றொரு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பணிக்கு வெளியே இருக்கும் போது பணி சீருடை மற்றும் அணிகலன்களை அணியக்கூடாது என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.