இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) ககாயான் திட்டத்துக்கான சோதனைகள் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்று மத்திய விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இந்த பணியின் இரண்டாம் கட்டமாக வியோமித்ரா என்ற பெண் மனித ரோபோவை விண்ணில் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.  






வியோமித்ரா என்பது வியோமா (விண்வெளி) மற்றும் மித்ரா (நண்பர்) ஆகிய இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளின் கலவையாகும். வியோமித்ரா என்பது பாதி மனித உருவத்தின் முன்மாதிரி மற்றும் முதல் ஆளில்லா ககன்யான் பணிக்காக உருவாக்கப்பட்டது. பெண் மனித உருவம் கொண்ட வியோமித்ரா ரோபோ முதன்முதலில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற 'மனித விண்வெளிப் பயணம் மற்றும் ஆய்வு’ என்ற  நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.   வியோமித்ரா ரோபோ அபாயகரமான சூழலில் எச்சரிக்கை கொடுக்கவும், உயிர் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவிட்ச் பேனல் செயல்பாடுகள் போன்ற செயல்பாடுகளை இதனால் செய்ய முடியும்.


இந்த ரோபோ விண்வெளி வீரர்களுடன் உரையாடவும், அவர்களை அடையாளம் காணவும், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் முடியும். வியோமித்ரா விண்வெளியில் மனித செயல்பாடுகளை உருவகப்படுத்தும் மற்றும் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாழ்க்கை ஆதரவு அமைப்புடன் தொடர்பு கொள்ளும்.






ககன்யான் திட்டம் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. 3 நாட்கள் பணிக்காக 400 கிமீ சுற்றுப்பாதையில் 3 விண்வெளி வீரர்களை கொண்ட குழுவினரை அனுப்பவும் பின் இந்திய கடல் நீரில் தரையிறங்குவதன் மூலம் அவர்களை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.


ககன்யான் திட்டத்திற்காக,  விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக விண்வெளிக்கு கொண்டு செல்வதற்கான ஏவுகணை வாகனம் உட்பட பல முக்கியமான தொழில்நுட்பங்களை உருவாக்குவது இந்த செயல்திட்டத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. விண்வெளியில் பணிபுரியும் விண்வெளி வீரர்களுக்கு பூமி போன்ற சூழலை வழங்குவதற்கும், வீரர்கள் அவசரகாலத்தில் தப்பிக்கும் ஏற்பாடுகள் மற்றும் அவர்களின் பயிற்சி, மீட்பு மற்றும் மறுவாழ்வுக்கான குழு மேலாண்மை அம்சங்களை மேம்படுத்துவதற்கும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ககன்யான் திட்டம் செயல்படுவத்துவதற்கு முன் பல்வேறு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஏர் டிராப் டெஸ்ட் (ஐஏடிடி), பேட் அபார்ட் டெஸ்ட் (பிஏடி) மற்றும் டெஸ்ட் வெஹிக்கிள் (டிவி) விமானங்கள் ஆகியவை பரிசோதிக்கப்பட உள்ளது.