டெல்லியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. அமெரிக்க அதிபர் பைடன், பிரட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட உலக தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர். இதில், ஜி20 அமைப்பின் 21 உறுப்பினராக ஆப்பிரிக்க ஒன்றியம் சேர்க்கப்பட்டுள்ளது.


அதேபோல, டெல்லி உச்சி மாநாட்டின் தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டது. இந்த தீர்மானத்தில் புவிசார் அரசியல் தொடர்பான புதிய பத்திகள் சேர்க்கப்பட்டுள்ளன. ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.


ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைந்த கதை:


உச்சி மாநாட்டின் இன்றைய அமர்வை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "கடந்தாண்டு செனகல் அதிபருக்கு பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியின்படி ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டதாக" கூறினார்.


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "கடந்த ஆண்டு பாலி உச்சிமாநாட்டின் போது, ​​செனகல் அதிபரும் அப்போதைய ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவருமான மேக்கி சால், இந்தோனேசிய அதிபர் மற்றும் பிரதமர் மோடியிடம் ஜி20 உறுப்பினராவது பற்றி முறையிட்டார். அப்போது, ஜி20 அமைப்பின் இந்திய தலைமையின் கீழ், அது நிச்சயமாக செய்யப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.


குட்டிக்கதை சொன்ன மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்:


இது மோடியின் உத்தரவாதம். அவர் கொடுத்த இந்த உறுதிமொழியை அவர் நிறைவேற்றி இருப்பதை நீங்கள் பார்த்தீர்கள். பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது, ​​அதே அதிபர் பிரதமரிடம் வந்து, அவர் கொடுத்து வாக்குறுதியை பற்றி நினைவுப்படுத்தி, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறினார்" என்றார்.


டெல்லி உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை குறித்து விவரித்து பேசிய அவர், "தலைவர்களின் பிரகடனத்தின் 74 மற்றும் 75ஆவது பத்திகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.


75ஆவது பத்தி, நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) பங்கைப் பற்றி பேசுகிறது. ஏனெனில், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது மிகப் பெரிய கவலையாக உள்ளது. இது ஜி20 அமைப்புக்கு மட்டும் அல்ல, முழு சர்வதேச சமூகமும் இந்த கவலையை பகிர்ந்து கொள்கிறது. 74ஆவது பத்தி, சிறிய ஆயுதங்கள் மற்றும் இலகுரக ஆயுதங்களின் சட்டவிரோத கடத்தல் மற்றும் திசைதிருப்பல் ஆகியவற்றை பற்றி பேசுகிறது. 


ஜி20 அமைப்புகள், இந்த உரையாடல்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் வெளிப்படையாக, கொள்கை நடவடிக்கைகளின் அடிப்படையில், அவை அவற்றின் வழிமுறைகள் மற்றும் பிரச்னையில் கவனம் செலுத்தும் மன்றங்களுக்குள் கொண்டு செல்லப்படும்" என்றார்.