அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் 24ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் மூத்த அர்ச்சகர்கள் வெளியிட்ட தகவலின்படி, ஜனவரி மூன்றாம் வாரத்தில் ராமர் கோயில் திறக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.


அயோத்தி ராமர் கோயில் திறப்பு:


இதுகுறித்து சுவாமி கோவிந்த் கிரி கூறுகையில், "ஜனவரி 21 முதல் 23க்கு இடையில் மங்களகரமான முகூர்த்தம் தீர்மானிக்கப்படும். இது குறித்து பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்தப்படும்" என்றார். ராமர் கோயிலின் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் (பூஜை) ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கும். பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்த பிறகு, கோயில் எப்போது திறக்கப்படும் என்பது இறுதி செய்யப்படும் என ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


ஜனவரி 24ஆம் தேதி, ராமர் கோயில் திறக்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற கோயில்களின் வரலாற்றைக் காண்பிக்கும் வகையில் அயோத்தியில் அமைக்கப்படும் அருங்காட்சியகம் குறித்த விளக்கக்காட்சி பிரதமர் நரேந்திர மோடியிடம் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்டது.


டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதமருடனான உயர்மட்டக் கூட்டத்தில், அருங்காட்சியகத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அயோத்தியைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


ராமர் சிலை பிரதிஷ்டை:


அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ராம் லல்லாவின் (குழந்தை ராமர் சிலை) பிரதிஷ்டை அடுத்தாண்டு, ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5ஆம் தேதி, ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையை பிரதமர் மோடி செய்தார்.


கடந்த 2020ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை மேற்பார்வையிட, ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையை பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கினார்.


ராமர் மற்றும் சீதாவின் சிலைகளை செய்ய ஷாலிகிராம் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிலைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கற்கள் நேபாளத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளது. இந்த கற்கள், 60 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று நம்பப்படுகிறது. நேபாளத்தின் காளி கண்டகி நதியிலிருந்து இந்த கற்கள் எடுக்கப்பட்டுள்ளது.





ராமர் சிலையின் உயரம் 5 முதல் 5.5 அடி வரை இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராம நவமி நாளில் சூரியனின் கதிர்கள் நேரடியாக ராமரின் நெற்றியில் விழும் வகையில் ராமர் சிலையில் உயரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.