புத்தாண்டின் முதல் நாளான நேற்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத்தின் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
விடுதலையின் நூற்றாண்டுக்கான கனவு:
அப்போது பேசிய அவர், '2023-ம் ஆண்டின் அறிவியல் தொலைநோக்கு' என்பது 2047ம் ஆண்டில் இந்தியாவை வரையறுப்பதாக அமையும். 2047-ல் 100-வது சுதந்திர தினத்தை நிறைவு செய்வதற்கான, கடைசி 25 ஆண்டுகளின் முதலாவது ஆண்டாக 2023 ஆம் ஆண்டு திகழ்கிறது. இது விடுதலையின் நூற்றாண்டுக்கான கனவுகளை உணர வைக்கும்.
”நமது முழக்கம்”
புதுமையான யோசனைகள் மற்றும் இலக்குகளை அடையும் நோக்கில் செயலாற்றுபவர்களுக்கே எதிர்காலம் சொந்தமானது. "ஜெய் ஜவான் - ஜெய் கிசான்" என்ற உத்வேகமான கருத்தால், லால் பகதூர் சாஸ்திரியை நாம் எப்போதும் நினைவில் கொள்கிறோம். ராணுவத்தினரைப் போற்றுவோம் - விவசாயிகளைப் போற்றுவோம் என்பதே அதன் அர்த்தம்.
மேலும், அடல் பிஹாரி வாஜ்பாய் "ஜெய் விக்யான்" என்பது அறிவியலைப் போற்றுவோம் என பொருள்படும். நாங்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். ஆனால் இந்தப் புதிய கட்டத்தில், 75 ஆவது விடுதலைப் பெருவிழா காலத்தில் இப்போது "ஜெய் அனுசந்தன்" என்பதைச் சேர்க்க வேண்டியது அவசியமாக உள்ளது. ஜெய் அனுசந்தன் என்பது புதுமையைப் போற்றுவோம் என்பதாகும். "ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தன் என்பதே நமது முழக்கம்" என்று பிரதமர் சுதந்திர தின உரையில் கூறியதை அமைச்சர் எடுத்துரைத்தார்.
ஸ்டார்ட் அப்:
பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையில் விண்வெளித் துறையை தனியார் பங்கேற்பாளர்களுக்கு அனுமதித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, இன்று குறுகிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்களைக் கொண்டதாக மாறி உள்ளது. அதே நேரத்தில், அறிவியல் ஆய்வுப் பணிகள், தொழில்நுட்பப் பணிகள் மற்றும் சந்திரனின் மேற்பரப்பில், ஒரு இந்தியரை தரையிறக்கும் மனித விண்வெளிப் பயணத் திட்டமான "ககன்யான்" ஆகியவற்றில் இஸ்ரோ கவனம் செலுத்துகிறது
நீலப் பொருளாதாரம்:
2023 ஆம் ஆண்டில், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கவுன்சில் (CSIR), பசுமை ஹைட்ரஜன் பணிகளில் கவனம் செலுத்தும். புவி அறிவியல் அமைச்சகம் (MoES) ஆழ்கடல் பணிகள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தும். இது வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும். 2023-ம் ஆண்டு கடல் சார்ந்த நீலப் பொருளாதாரத்தில், மேலும் முன்னேற்றத்தைக் காணும் ஆண்டாக 2023 அமையும்” என மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.