உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதலமைச்சராக இருந்தபோது தன்னைக் கொலை செய்ய பலமுறை கூலிப்படைகளை ஏவியதாக கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணன் ரானே. இவர் முன்னாள் சிவசைனிக் என்பது கூடுதல் தகவல்.


கொலை முயற்சி:


மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாராயணன் ரானே, உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தபோது என்னைக் கொலை செய்ய அவ்வப்போது கூலிப்படைகளை நாடுவார். அவர்கள் எனக்கே போன் செய்து உங்களை கொலை செய்யச் சொல்லி அசைன்மன்ட் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே. உஷாராக இருந்து கொள்ளுங்கள் என்று எச்சரிப்பார்கள். அதைவிட இன்னொரு விஷயம் என்னவென்றால் அவர் ஏவிய யாராலும் என்னை நெருங்கக் கூட முடியவில்லை என்பதுதான்.


2019 நவம்பர் முதல் 2022 ஜூன் வரை உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராக இருந்தபோது கொரோனா மருந்து கொள்முதலில் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டிருக்கிறார்.  இப்படிப்பட்டவர் எங்கள் கட்சிப் பிரமுகரும் துணை முதல்வருமான தேவேந்திர பட்நவிஸை தகுதியற்றவர் என்று விமர்சிப்பது தகுமோ? என்று வினவினார்.


யார் இந்த நாராயண ரானே..!


இன்று உத்தவ் தாக்கரேவை வந்துபார் என்று விமர்சிக்கும் ரானேவை மிகப்பெரிய ஆளாக வளர்த்ததே சிவசேனா கட்சி தான். அவரது அரசியல் அடித்தளம் அங்குதான் அமைந்தது. கவுன்சிலர் பதவியில் இருந்து மகாராஷ்ட்ரா முதலமைச்சர் பதவி வரை இவரை அமர வைத்து அழகு பார்த்தது சிவசேனா. 20 வயதில் தனது அரசியல் வாழ்க்கையை சிவசேனாவில் தொடங்கினார் நாராயண ரானே. அப்போது பால் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவராக இருந்தார். 1990-ல் சிவசேனா எம்.எல்.ஏவாக மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். 1998-ல் மனோகர் ஜோஷி முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து பால்தாக்கரேவால் நாராயண் ரானே மகாராஷ்ட்ரா முதல்வராக நியமிக்கப்பட்டார். சுமார் 8 மாதங்கள் முதலமைச்சராக இருந்தார். 


நாராயண்ரானே - உத்தவ் தாக்கரே:


ஆனால் நாராயண் ரானே முதல்வர் ஆக்கப்பட்டதில் உத்தவ் தாக்கரேவுக்கு அப்போது உடன்பாடில்லை என சிவசேனா வரலாற்றுப் பக்கங்கள் கூறுகிறது. அப்போது இருந்தே இருவருக்குள்ளும் கருத்து மோதல் நிலவி வந்துள்ளது.  இப்படியே மோதலுடனேயே சிவசேனாவில் காலம் தள்ளிய நாராயண ரானே, 2005-ல் சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி நாராயண் ரானேவுக்கு அமைச்சர் பதவி வழங்கியது. சில காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.


ஆனால் அவர் இலக்கெல்லாம் முதல்வர் பதவியாகவே இருந்தது. காங்கிரஸில் அது அவருக்கு சாத்தியப்படவில்லை. எனவே தனக்கு முதல்வர் பதவி வழங்கவில்லை எனக் கூறி சோனியா காந்தியை கடுமையாக தாக்கிப்பேசத் தொடங்கினர். இதன்காரணமாக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் மன்னிப்பு கேட்டு மீண்டும் இணைந்ததும் வேறு கதை. ஆனால் அதன் பின்னர் காங்கிரஸ் டிக்கெட்டில் அவரால் சோபிக்க முடியவில்லை. பின்னர் பாஜகவில் இணைந்த அவர் இப்போது மத்திய அமைச்சராக உலா வருகிறார்.