நாட்டின் தலைநகரான டெல்லியில் அடிக்கடி குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், குற்றவாளி ஒருவனை போலீசார் செங்கற்களால் தாக்கி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் அமைந்துள்ளது நிலோதி நகர். நங்க்லோய் ஜத் நகருக்கு அருகில் அமைந்துள்ளது இந்த பகுதி.


தப்பியோடிய குற்றவாளிகள்:


டெல்லியைச் சேர்ந்தவர்கள் தயான்சிங் மற்றும் நவ்னீத். இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்களை காவல்துறையினரும் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை டெல்லி போலீசாரான மனோஜ் மற்றும் தேவேந்தர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நிலோதி நகர் அருகே உள்ள மாச்சி சோக் பகுதியில் தயான்சிங் மற்றும் நவ்னீத்தை போலீசார் கண்டுள்ளனர்.


போலீசாரை கண்டதும் நவ்னீத் மற்றும் தயான்சிங் தங்களது மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்றனர். ஆனால், அவர்களது மோட்டார் சைக்கிள் நடுவழியிலே பழுதாகி நின்றது. அப்போது தேவேந்தர் வண்டியை ஓட்டிவந்த நவ்னீத்தை பிடித்துவிட்டார். ஆனால், வண்டிக்கு பின்னால் அமர்ந்திருந்த தயான்சிங் தப்பி ஓடினார். இதையடுத்து, தலைமை காவலரான மனோஜ் தப்பியோடிய தயான்சிங்கை துரத்தி ஓடினார்.






செங்கலை வீசி பிடித்த போலீஸ்:


அவரிடம் வேறு வழியில்லாமல் மாட்டிக்கொண்ட தயான்சிங் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவன் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை நீட்டி தலைமை காவலர் மனோஜை மிரட்டினார், ஆனாலும், துணிச்சலுடன் தயான்சிங்கை எதிர்கொண்ட மனோஜ் அங்கே அருகில் இருந்த செங்கல் ஒன்றை கையில் எடுத்து குற்றவாளி மீது வீசினார். இதில் நிலை தடுமாறிய தயான்சிங் சுதாரித்துக் கொண்டு மனோஜை சுட முயற்சித்தான். ஆனாலும், அதற்குள் தயான்சிங்கை மடக்கிப்பிடித்த மனோஜ் அவனை கீழே தள்ளினார்.


உடனடியாக அருகில் இருந்த பொதுமக்களும் அங்கு சட்டென்று விரைந்து தயான்சிங்கை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர், போலீசார் குற்றவாளிகளான தயான்சிங் மற்றும் நவ்னீத்தை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தலைமை காவலர் மனோஜ் துணிச்சலுடன் செங்கலை வீசி குற்றவாளியை மடக்கிப்பிடித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாட்டுத்துப்பாக்கியுடன் கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளியை துணிச்சலுடன் பிடித்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 


தயான்சிங் குற்றச்சம்பவம் ஒன்றில் கடந்தாண்டு பரோலில் வெளியே வந்தவர் என்றும், பரோலில் வந்த பிறகு தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.