கடந்த 2014ஆம் ஆண்டு, பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தூண்டி விடுவதாக தொடர் குற்றசாட்டு எழுந்து வருகிறது. ஆளுங்கட்சி தலைவர்களுக்கு எதிராக வழக்குகள் இருக்கும் போதிலும் எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டும் குறிவைக்கப்படுவதாக விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை அச்சுறுத்துவதாக காங்கிரஸ் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இன்று மனுவை தள்ளுபடி செய்துள்ளது. எதிர்க்கட்சிகளின் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது வாதிட்ட அவர், "பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டு முதல் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பதிவு செய்த வழக்குகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது" என்றார்.
தரவுகளை மேற்கோள் காட்டி வாதிட்ட அவர், "முந்தைய பத்தாண்டுகளை விட கடந்த ஏழு ஆண்டுகளில் 6 மடங்கு அதிகமான வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. ஆனால் தண்டனை விகிதம் 23 சதவீதம் மட்டுமே. 95 சதவீத அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குகள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன. இது அரசியல் பழிவாங்கல். பாரபட்சத்தின் தெளிவான அறிகுறியாகும்" என்றார்.
வாதத்தை கேட்ட இந்திய தலைமை நீதிபதி டி ஓய் சந்திரசூட், "விசாரணை மற்றும் வழக்குத் தொடுப்பதில் இருந்து எதிர்க்கட்சிகளுக்கு விலக்கு கோருகிறீர்களா? குடிமக்களாக அவர்களுக்கு ஏதேனும் சிறப்பு உரிமைகள் உள்ளதா?" என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு அல்லது விலக்கு அளிக்கக் கோரவில்லை. மாறாக சட்டத்தின் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என கேட்கிறோம்.
எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச் செய்வதற்கும், மன உறுதியைக் குலைப்பதற்கும் அரசாங்கம் தனது நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறது. இது ஜனநாயகத்திற்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் தீங்கானது. பல எதிர்க்கட்சித் தலைவர்கள் எந்த ஆதாரமும் அல்லது நியாயமும் இல்லாமல் கைது செய்யப்பட்டனர். மேலும் இது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தங்கள் கடமைகளைச் செய்யும் திறனைப் பாதிக்கிறது" என்றார்.
இதை கேட்ட இந்திய தலைமை நீதிபதி, "இந்த மனு அடிப்படையில் அரசியல்வாதிகளுக்கானது. ஊழல் அல்லது குற்றச்செயல்களால் பாதிக்கப்படக்கூடிய பிற குடிமக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை மனு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. உச்ச நீதிமன்றத்தால் வெறும் அரசியல்வாதிகளுக்கு பொதுவான வழிகாட்டுதல்களையோ கொள்கைகளையோ வகுக்க முடியாது" என தெரிவித்தார்.