இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75ம் ஆண்டு விழா,  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா,  தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி, தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.




IMAGE COURTESY: ASIANET


வளர்ச்சிப் பாதையில் இந்தியா - அமித் ஷா


நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, கடந்த 8 ஆண்டுகளில் வளர்ச்சிப் பாதையில் 11 ஆவது இடத்திலிருந்து 5 ஆவது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது. சமீபத்தில் கிடைத்த ஆய்வறிக்கை படி 2027 ஆம் ஆண்டில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் எனவும், 2025 ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவின் வளர்ச்சி இருக்கும் என்றும் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.  2022-23ம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.8 சதவிகிதமும் வளர்ச்சியும், 2023-24ம் ஆண்டில்  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1சதவிகிதமும் உயர்ந்து, ஜி20 நாடுகளில் இந்தியா  முதலிடத்தைப் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.


தமிழகம் மீது மோடிக்கு தனி கவனம் - அமித் ஷா


முன்னதாக தமிழ்நாட்டிற்கு  ரூ.62 ஆயிரம் கோடி வரி பகிர்மான தொகையாக கிடைத்த நிலையில்,  தற்போது அந்த தொகை ரூ.1.90 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றார். பிரதமர் மோடி தமிழ்நாடு மீது  தனிக்கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.  தமிழ் உலகின் மிக மூத்த, பழைமையான மொழி, இலக்கிய செழுமை வாய்ந்த மொழி தமிழ் எனவும்,  தமிழ் மொழியின் பெருமை தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பெருமை என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு வழங்கப்படும் தொகை 8 ஆயிரத்து 900 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், சென்னை மெட்ரோ இரண்டாவது கட்ட திட்டத்திற்காக ரூ.3.7 ஆயிரம் கோடி செலவிடப்படுவதாகவும் அமித்ஷா  கூறினார்.


"தமிழ் வழியில் மருத்துவம், பொறியியல் கல்வி"


தமிழகத்தில் புதியதாக 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளதை நினைவுகூர்ந்த அமித் ஷா, மருத்துவக் கல்வி மற்றும் பொறியியல் கல்வியை தமிழ் வழியில் பயிற்றுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தார். அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் வழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பை பயில்வதில் நேரிடும் சவால்களை, தவிர்க்க இந்த நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


தமிழ்வழி கல்வி பயிலும் மாணவர்கள் மருத்துவ அறிவியலை எளிதாக புரிந்து கொள்ளவும், ஆராய்ச்சியில் ஈடுபடவும், அதன்மூலம் தங்கள் மொழியின் வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கவும் வாய்ப்பு உருவாகும் எனவும் கூறினார். தாய்மொழியில் உயர்கல்வி படிப்புகளை ஏற்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் அமித் ஷா வலியுறுத்தினார்.


மேலும் படிக்க Gujarat Congress Candidates List: சூடு பிடிக்கும் குஜராத் தேர்தல் களம்.. வெளியிடப்பட்ட இரண்டாம் வேட்பாளர் பட்டியல்..


Gujarat Election : " வெற்றி பெற்றால் கிரிக்கெட் மைதானத்தில் மோடி பெயர் நீக்கம்" - தேர்தல் வாக்குறுதி அளித்த காங்கிரஸ்..!