HP Elections 2022: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் பகல் 1 மணி நிலவரப்படி 37.19% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிம்லா: இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 2023ம் ஆண்டு, ஜனவரி 8ம் தேதியோடு நிறைவடைய உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதற்கான முடிவுகள், டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்படுகிறது. 


இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய தேர்தலில் மொத்தம் 412 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இதில் சுமார் 58 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.


இமாச்சல பிரதேச சட்டசபை மொத்தம் 68 இடங்களை கொண்டது. இந்த 68 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இமாச்சல  பிரதேசத்தில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பாதுகாப்பு பணியில் 11,000க்கும் மேற்பட்ட போலீஸ்கார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கங்க்ரா மாவட்டத்தில் 15 சட்டமன்ற இடங்கள் மற்றும் 13,34,542 வாக்காளர்கள் உள்ளனர். லாஹவுல்-ஸ்பிடியில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான 25 ஆயிரத்து 496 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் மொத்தம் 55,74 793 வாக்களர்கள் வாக்களிக்கின்றனர். இதில் 412 வேட்பாளர்கள் மோதுகின்றனர். இன்று காலை 8 மணிக்கு  தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் தற்போது முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில் அதற்கான வாக்குப்பதிவு இன்று காலை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 7,881 ஓட்டுச்சாவடிகளில் மக்கள் வாக்களித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி பகல் 1 மணி நிலவரப்படி 37.19 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன.






இதற்கு முன்னதாக முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், பாஜக தலைவர் ஜேபி நட்டா, மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் மற்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் வாக்களித்தனர். மாநிலத்தில் திரும்பவும் தக்கவைக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் உறுதியளித்த 10 உத்தரவாதங்களை நிறைவேற்றும் என கூறப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் வலுவான செயல்திறனை வெளிப்படுத்தும் நம்பிக்கையில் மலைப்பகுதிக்குள் நுழைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தில் 75.57 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 2017 தேர்தலில் பாஜக 68 இடங்களில் 44 இடங்களை வென்றது, காங்கிரஸ் 21 இடங்களை மட்டுமே கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.