சிம்லா முதல் ஸ்பிட்டி வரை உள்ள 55 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் கொண்ட இமாச்சல பிரதேச மாநிலத்தின் இன்று சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இமாச்சல பிரதேச மக்கள் புதிய மாநில அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இமாச்சல பிரதேச தேர்தல்


மலைகள், காடுகள் நிறைந்த மாநிலமான இதில் தேர்தல் நடத்துவது எப்போதுமே ஒரு கடினமான வேலைதான். இதில் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மூன்று தற்காலிக வாக்குச் சாவடிகள் உட்பட 7,884 வாக்குச் சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. லாஹவுல் மற்றும் ஸ்பிதியில் உள்ள தாஷிகாங்கில் வாக்குச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.


15,256 அடி உயரத்தில் அமைந்துள்ள தாஷிகாங்கில் உள்ள வாக்குச் சாவடியானது உலகின் மிக உயர்ந்த வாக்குச் சாவடியாகும். இந்த வாக்குச்சாவடியில் 52 வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள்.  இந்த வாக்குச்சாவடி மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்கும் வகையில் மாதிரி வாக்குச்சாவடியாக மாற்றப்பட்டுள்ளது.



குறைந்த வாக்குச்சாவடிகள் கொண்ட மாவட்டம்


லாஹவுல்-ஸ்பிடி மாவட்டத்தில் மொத்தம்  92 வாக்குச் சாவடிகள் உள்ளன. மாநிலத்திலேயே மிகக் குறைந்த வாக்குச்சாவடிகள் கொண்ட மாவட்டமாக இது உள்ளது. மாநிலத்தின் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவு இருப்பதால், தொலைதூர பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் கூட தேர்தலில் வாக்களிப்பதை உறுதி செய்வதற்காக தேர்தல் அதிகாரிகள் சிரமப்பட்டு இங்கு வாக்குச்சாவடி அமைத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்: பாலே இங்க தேறல.. பாயாசம் கேக்குதா? ஸ்கூல் இருக்கு..! மாணவரின் கேள்விக்கு காமெடியுடன் பதிலளித்த விருதுநகர் கலெக்டர்!


தொலைதூர வாக்குச்சாவடி


மாநிலத்தின் தொலைதூர மாவட்டமான சம்பாவில் அதிகபட்சமாக 1,459 வாக்காளர்கள் உள்ளனர். பார்மூர் ஏசியின் 26-சாஸ்க் படோரி வாக்குச் சாவடி இந்த மாவட்டத்தில் உள்ள தொலைதூர வாக்குச்சாவடியாகும். அந்த வாக்குச்சாவடியை அடைய 14 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டும். 






பாஜக - காங்கிரஸ்


மாநிலம் முழுவதும் உள்ள 68 தொகுதிகளில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் உள்பட மொத்தம் 412 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக-விற்காக பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தை முன்னணியில் இருந்து வழிநடத்தினார். மேலும் மாநிலத்தின் வாக்காளர்களுக்கு தனிப்பட்ட வேண்டுகோளுடன் தனது பிரச்சாரத்தை முடித்தார்.


பா.ஜ.க. சின்னமான தாமரைக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் தனது பலத்தை அதிகரிக்கும் என்று வேட்பாளர்களுக்கு செய்தி கூறி சென்றார். பல ஆண்டுகளாக தேர்தல்களில் தோல்வியை பெற்று வரும் காங்கிரஸ் இந்த தேர்தலில் மீண்டும் வரும் என்ற நம்பிக்கையில் உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.