Amit Shah: பீகார் மாநிலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர் புறப்படும்போது நிலைதடுமாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விபத்தில் இருந்து உயிர் தப்பிய அமித் ஷா:


இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை மக்களவை தேர்தல் முடிவுகள்தான் தீர்மானிக்க உள்ளது. கடந்த 19ஆம் தேதி, 102 தொகுதிகளுக்கும் முதற்கட்ட தேர்தலும் கடந்த 26ஆம் தேதி 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தலும் நடந்தது.


இதையடுத்து, வரும் மே மாதம் 7ஆம் தேதி மூன்றாம் கட்டமாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 94 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. பீகார் மாநிலத்தில் மட்டும் 5 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், பிரச்சாரம் செய்வதற்காக பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பெகுசாராய் நகரத்திற்கு சென்றார்.


கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டரால் பரபரப்பு:


தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட அமித் ஷா தயாரானார். அப்போது, அவர் பயணித்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்தது. பலத்த காற்றின் காரணமாக ஹெலிகாப்டர் வலது பக்கம் சாய்ந்து தரையில் மோத இருந்தது.


சாதூர்யமாக ​செயல்பட்ட​ விமானி ஹெலிகாப்டரை கட்டுக்குள் கொண்டு வந்தார். இதனால், விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், அமித் ஷா, நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர் கட்டுப்பட்டை இழந்து தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது பாஜக. இந்தியா கூட்டணியை பொறுத்தவரையில், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விகாஷீல் இன்சான் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.


கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டும் வென்றது. இந்த முறை, 7 முதல் 9 தொகுதிகளில் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி, பாஜக கூட்டணியே கணிசமான தொகுதிகளில் வெற்றுபெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையும் படிக்க: Mamata Banerjee: கால் தவறி கீழே விழுந்த மம்தா பானர்ஜி.. ஹெலிகாப்டரில் பரபரப்பு!