Mamata Banerjee Slipped: ஹெலிகாப்டரில் அமரும்போது மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கால் தவறி இருக்கைக்கு அருகே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரி கீழே விழுந்த அவரை உடனடியே தூக்கி விட்டார். இருப்பினும், மம்தாவுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. 


கால் தவறி விழுந்த மம்தா பானர்ஜி:


நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் மக்களவை தேர்தல், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வருகிறது. ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 19ஆம் தேதி, நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கும் நேற்று 88 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.


அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் ஒன்றான மேற்குவங்கத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அங்கு கணிசமான தொகுதிகளை கைப்பற்ற பாஜகவும் தனது கோட்டையை தக்க வைத்து கொள்ள மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டி வருகிறது.


இந்த நிலையில், துர்காபூர் நகரில் இருந்து அசன்சோலுக்கு ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்ய மம்தா திட்டமிட்டிருந்தார். ஹெலிகாப்டர் ஏறும்போது மம்தா பானர்ஜி கால் தவறி ஹெலிகாப்டரின் இருக்கைக்கு அருகே கிழே விழுந்துள்ளார்.


ஹெலிகாப்டரில் பரபரப்பு சம்பவம்:


ஆனால், கீழ விழுந்த மம்தாவை அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரி உடனடியே தூக்கி விட்டார். சிறிய காயமே ஏற்பட்ட காரணத்தால் அசன்சோலுக்கு தனது பயணத்தை தொடங்கினார். சமீப காலமாகவே, மம்தா சிறிய சிறிய விபத்தில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது.


மூன்று மாதங்களுக்கு முன்பு, மம்தா, கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. பர்த்வான் நகரில் இருந்து கொல்கத்தாவுக்கு மம்தா காரில் பயணித்தப்போது இந்த சம்பவம் நடந்தது. மம்தாவின் கான்வாய் வாகனத்தின் முன்பு கார் ஒன்று திடீரென வந்துள்ளது. இதையடுத்து, கார் ஓட்டுநர் சட்டென பிரேக் போட்டார். இதனால், மம்தாவின் நெற்றியிலும் கையிலும் சிறிய காயம் ஏற்பட்டது.


கடந்த 2021ஆம் ஆண்டு மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலின்போதும் மம்தாவுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது. தேர்தலுக்காக நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும்போது தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மம்தா பரபர குற்றச்சாட்டு சுமத்தினார்.


4 முதல் 5 பேர், தன்னை காரை நோக்கி தள்ளியதாகவும் காருக்கு உள்ளே அவரை தள்ளிவிட்டு அதன் கதவுகளை மூடியதாகவும் கூறப்பட்டது. இதனால், அவரின் காலில் படுகாயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் நடக்கும்போது, தன்னை சுற்றி காவல்துறை அதிகாரிகள் யாரும் இல்லை என்றும் மம்தா கூறியிருந்தார். இந்த சம்பவம், மேற்குவங்கத்தில் மட்டும் இன்றி தேசிய அளவிலும் பரபரப்பை கிளப்பியது.