நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு விவகாரங்கள் காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடரும் மழைக்காலக் கூட்டத்தொடரும் பாதிக்கப்பட்ட நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.


நீதிமன்றத்தில் இவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ளதா?


இந்த நிலையில், நீதிமன்றத்தில் எவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ளது என நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.


"டிசம்பர் 1ஆம் தேதி வரை, 5 கோடியே 8 லட்சத்து 85 ஆயிரத்து 856 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில், 61 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் 25 உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. மாவட்டம் மற்றும் உள்ளூர் நீதிமன்றங்களில் 4.46 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.


நாடு முழுவதும் இந்திய நீதித்துறையில் 26,568 நீதிபதிகள் வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் வரை நியமிக்கலாம். பல்வேறு உயர் நீதிமன்றங்களில்  1,114 நீதிபதிகள் வரை வைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் உள்ளூர் நீதிமன்றங்களில் 25,420 நீதிபதிகள் வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது" என மத்திய சட்டத்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.


மத்திய அரசு தகவல்:


கடந்தாண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நிலவரப்படி 71,411 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. அதில் 56,000 சிவில் வழக்குகள் மற்றும் 15,000 க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகள் அடங்கும்.


கடந்தாண்டு நிலவரப்படி, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 71,411 வழக்குகளில் 10,491 வழக்குகள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. 42,000 வழக்குகள் ஐந்து ஆண்டுகளாகவும் 18,134 வழக்குகள் ஐந்து முதல் 10 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்திலும் நிலுவையில் உள்ளன.


கடந்த 2016 ஆம் ஆண்டில் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 40,28,591 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், ​​கடந்தாண்டு ஜூலை 29 ஆம் தேதி வரை அவற்றின் எண்ணிக்கை 59,55,907 ஆக உயர்ந்தது.