இந்தியாவுக்கு குடைச்சல் தந்து வரும் சீக்கிய பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்காவில் வைத்து கொல்ல திட்டமிடப்பட்டதாகவும் அந்த முயற்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இந்தியா அதிகாரி ஒருவர்தான் இந்த சதி திட்டத்தை தீட்டியதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் ஆயுதங்களையும் போதை பொருள்களையும் சட்ட விரோதமாக விற்று வரும் நிக்கில் குப்தா என்பவர் மூலம், கூலிப்படையை சேர்ந்த ஒருவருக்கு பணம் கொடுத்து பன்னூனை கொலை முயற்சி நடந்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், இந்த சதி திட்டத்தில் ஈடுபட்ட இந்தியா உளவுத்துறையை சேர்ந்த அதிகாரியின் பெயரை அமெரிக்கா இன்னும் வெளியிடவில்லை.
பன்னூனை கொல்ல சதி திட்டம்:
இந்தியா மீது அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டு உலக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என இந்தியா தெரிவித்துள்ளது. பன்னூனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிக்கில் குப்தா, தற்போது செக் குடியரசு நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செக் குடியரசு நாட்டில் இருக்கும் நிக்கில் குப்தாவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அமெரிக்க அரசு முயற்சி செய்து வருகிறது. இச்சூழலில், இந்த விவகாரத்தில் இந்தியாவை தலையிடக் கோரி நிக்கில் குப்தாவின் குடும்பத்தார் இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.ன் பட்டி ஆகியோர் கொண்ட அமர்வு, செக் குடியரசு நாட்டின் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் முன்வைத்த வாத்திற்கு பதில் அளித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, "நீங்கள் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும். இதை எல்லாம் நாங்கள் விசாரிக்க மாட்டோம். எங்களின் வரம்பின் கீழ் வராது. இது, வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு முக்கியமான விஷயம். அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.
"எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான உத்தரவு கூட எங்களிடம் இல்லை. என்ன நடக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது" என ஆர்யமா சுந்தரம் வாதிட்டார். இதை தொடர்ந்து, வரும் ஜனவரி மாதம் 4ஆம் தேதி வழக்கின் விசாரணையை எடுத்து கொள்வதாக நீதிபதிகள் ஒப்பு கொண்டனர்.
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறிய நிலையில், மற்றொரு காலிஸ்தான் தீவிரவாதியை கொல்ல இந்தியா திட்டமிட்டதாகவும் இதை அமெரிக்க தடுத்து நிறுத்தியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருப்பது உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.