கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்ட முக்கியமான மன்னர்களில் ஒருவர் திப்பு சுல்தான். கர்நாடகா மாநில எல்லைக்குள் வரும் மைசூரு பகுதியில் 1700களில் ஆட்சி செய்த திப்புசுல்தான், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பல நல்ல திட்டங்களை முன்னெடுத்தார் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.


கடந்த 1750ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் பிறந்த திப்பு சுல்தான், மைசூர் பட்டுத் தொழில் வளர்ச்சிக்கு காரணமான புதிய நில வருவாய் அமைப்பு உள்பட பல நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். காலனித்துவ எதிர்ப்பின் வீரனாகக் கொண்டாடப்படும் திப்பு சுல்தான், கடந்த 1799ஆம் ஆண்டு, நவம்பர் 20ஆம் தேதி நான்காவது ஆங்கிலோ-மைசூர் போரில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் படைகளால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். 


மீண்டும் புயலை கிளப்பும் திப்பு சுல்தான் அரசியல்: 


இதற்கிடையே, திப்பு சுல்தான் ஒரு பெரிய கொடுங்கோலன் என்றும் அவரது ஆட்சி காலத்தில் ஆயிரக்கணக்கானோர் கட்டாயப்படுத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் வலதுசாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். கர்நாடகாவில் திப்பு சுல்தான் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதில் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.


இந்த நிலையில், மைசூர் விமான நிலையத்திற்கு திப்பு சுல்தான் பெயர் வைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்திருப்பதும் அதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்திருப்பதும் பேசுபொருளாக மாறியுள்ளது. மைசூர் விமான நிலையம், மண்டகல்லி விமான நிலையம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.


விமான நிலைய பெயர் மாற்றம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசிய ஹூப்ளி-தர்வாட் (கிழக்கு) தொகுதி எம்எல்ஏ பிரசாத் அப்பாய்யா, "மைசூர் விமான நிலையத்தை திப்பு சுல்தான் விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என முன்மொழிகிறேன்" என்றார்.


காங்கிரஸ் vs பாஜக:


கர்நாடகாவில் கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து திப்பு சுல்தான் பிறந்த நாளை அரசு விழாவாக காங்கிரஸ் அரசு கொண்டாடியது.
ஆனால், பாஜக அரசு அங்கு ஆட்சி அமைத்ததை அடுத்து அது ரத்து செய்யப்பட்டது. திப்பு சுல்தான் எதிர்ப்பு அரசியலை தொடர்ந்து செய்து வருகிறது பாஜக. 


கடந்த மே மாதம் தேர்தலுக்கு முன்னதாக திப்பு சுல்தான் விவகாரத்தை பயன்படுத்தி அரசியல் செய்ய பாஜக முயற்சித்தது. சர்ச்சை பேச்சுக்கு பெயர் போன கர்நாடக பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல், அரசியலில் புதிய புயலை கிளப்பினார். திப்பு சுல்தானின் தீவிர ஆதரவாளர்கள் அனைவரையும் கொல்ல மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


கடந்த 2014ஆம் ஆண்டு, பாஜக ஆட்சி அமைத்ததில் இருந்தே, பல பாரம்பரிய நினைவு சின்னங்கள், வரலாற்று இடங்களுக்கு வேறு பெயர்கள் சூட்டப்பட்டு  வருகிறது. குறிப்பாக, இஸ்லாமிய பெயர் கொண்ட இடங்களின் பெயர் மாற்றப்பட்டு வருவதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், குடியரசு தலைவர் மாளிகையில் அமைந்துள்ள தோட்டத்திற்கு அமிர்த உத்யன் என பெயர் மாற்றப்பட்டது.