இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை தொடங்கியுள்ளது காங்கிரஸ். அதன்படி, மணிப்பூரில் யாத்திரையை தொடங்கிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம் மாநிலம் சென்றார். அப்போது, ராகுல் காந்தி யாத்திரை வாகனத்தின் மீது பாஜகவினர் சிலர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.


ராகுல் காந்திய யாத்திரையில் நடந்தது என்ன?


அஸ்ஸாம் வடக்கு லக்கிம்பூர் நகரத்தில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை வரவேற்கும் விதமாக காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் ஒட்டினர். ஆனால், அந்த போஸ்டரை பாஜகவினர் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.


இதை கடுமையாக கண்டித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இந்திய மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்த உரிமைகளையும் நீதியையும் மாநிலத்தின் ஆளுங்கட்சி காலில் போட்டு மிதிக்க முயற்சி செய்து வருகிறது" என குற்றம் சுமத்தியுள்ளார்.


இதுகுறித்து எஸ்க் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய ஒற்றுமை நீதி பயணத்தின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது வெட்கக்கேடான சம்பவம். அஸ்ஸாம் லக்கிம்பூரில் பாஜக குண்டர்களால் காங்கிரஸ் கட்சியின் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை கிழித்ததையும் வன்மையாக கண்டிக்கிறோம்.


"மிரட்டல் தந்திரங்களுக்கு காங்கிரஸ் கட்சி பயந்துவிடாது"


கடந்த 10 ஆண்டுகளில், இந்திய மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள ஒவ்வொரு உரிமையையும், நீதியையும் காலில் போட்டு மிதிக்க பாஜக முயன்றது. ஜனநாயகத்தை ஹைஜாக் செய்து மக்களின் குரலை அடக்க விரும்புகிறது. அஸ்ஸாமில் பாஜக அரசு நடத்திய தாக்குதல் மற்றும் மிரட்டல் தந்திரங்களுக்கு காங்கிரஸ் கட்சி பயந்துவிடாது.


இந்த பாஜக கைக்கூலிகள் மீது காங்கிரஸ் கட்சி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் நீதிக்காக ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் போராட்டத்தையும் உறுதியையும் யாராலும் தடுக்க முடியாது" என பதிவிட்டுள்ளார்.


 






மணிப்பூரில் தொடங்கி மும்பை வரை அதாவது 6 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு யாத்திரை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி. கடந்தாண்டு நடந்த இனக்கலவரத்தாலும் அதைத்தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவங்களாலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட அதே மணிப்பூரில் இருந்து ராகுல் காந்தி யாத்திரையை தொடங்கியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.