ஆந்திர பிரதேசத்தில் தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. மாநில முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி வகித்து வருகிறார். இன்னும் இரண்டு மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனுடன், ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தலும் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் வழி தவறியதால் பரபரப்பு:


கர்நாடகா, தெலங்கானாவை தொடர்ந்து, ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆந்திர காங்கிரஸ் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய். எஸ். சர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, இந்த முறை பல தொகுதிகளில் மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த முறை, தெலுங்கு தேசம் கட்சியே ஆட்சியை கைப்பற்றும் என தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.


இந்த நிலையில், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பயணித்த ஹெலிகாப்டர் வழிதவறி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து அல்லூரி சீதாராமன் ராஜூ மாவட்டத்தில் உள்ள அரக்கு-க்கு சென்றுள்ளார் சந்திரபாபு நாயுடு. அப்போது, அவரின் ஹெலிகாப்டர் வழிதவறி சென்றது.


ஹெலிகாப்டரை இயக்கிய விமானிக்கு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, மீண்டும் சரியான பாதையில் ஹெலிகாப்டர் பயணத்தை தொடர்ந்தது. பின்னர், அரக்கு பகுதியில் சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அரக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது.


தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, தற்போது ஊழல் வழக்கு ஒன்றில் சிக்கியுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 


இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இந்த வழக்கில் அவருக்கு பிணை வழங்கப்பட்டதை தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு தற்போது வெளியே உள்ளார்.  


இதையும் படிக்க: Election Commission : ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த ரூ.10,000 கோடி செலவா? தேர்தல் ஆணையம் போட்ட கணக்கு.. தலையே சுத்துதே