உத்தரப்பிரதேச அரசு நேற்றைய தினம் நவம்பர் 25-ஆம் தேதி அதாவது சைவ வாழ்க்கை முறையை ஆதரித்த சாது டி.எல் வாஸ்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு "அசைவம் இல்லாத நாள்" (no non veg day) என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால் உத்திர பிரதேசத்தில் அனைத்து இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
“அகிம்சை’ என்ற கோட்பாட்டை முன்வைத்த நம் நாட்டின் மாமனிதர்களின் பிறந்தநாள் ‘அகிம்சை’ தினங்களாகக் கொண்டாடப்படுகிறது. நாம் மகாவீர் ஜெயந்தி, புத்த ஜெயந்தி, காந்தி ஜெயந்தி மற்றும் சாது டி.எல் வாஸ்வானி ஜெயந்தி போன்றவற்றைக் கொண்டாடுவது போல, உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள இறைச்சிக் கூடங்களை மூட அரசு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. நவம்பர் 25, 2023 அன்று சாது டி.எல் வாஸ்வானியின் பிறந்தநாளையொட்டி, ‘அசைவம் இல்லாத நாள்’ என அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அனைத்து இறைச்சிக் கூடங்களும், இறைச்சிக் கடைகளும் மூடப்பட வேண்டும்” என்று உத்தர பிரதேசத்தின் சிறப்புச் செயலர் தர்மேந்திர பிரதாப் சிங் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட் (DM), பிரதேச ஆணையர்கள், முனிசிபல் கமிஷனர்கள் மற்றும் பிற மூத்த மாநில அதிகாரிகளுக்கு இந்த உத்தரவை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் ஹலால் சான்றளிக்கப்பட்ட உணவுப் பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மீரா இயக்கத்தைத் தொடங்கிய கல்வியாளர் சாது தன்வர்தாஸ் லீலாராம் வாஸ்வானி, ஹைதராபாத் சிந்துவில் (தற்போது பாகிஸ்தானில் உள்ள பகுதி) ஒரு சிந்தி குடும்பத்தில் பிறந்தார். நாட்டில் பெண்களின் கல்விக்காகவும் விடுதலைக்காகவும் குரல் எழுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சாது டி.எல். வாஸ்வானி ஜனவரி 16, 1966 அன்று தனது 86வது வயதில் காலமானார். புனேவில் அவரது வாழ்க்கை மற்றும் கற்பித்தலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. நவம்பர் 25 அன்று சாது வாஸ்வானியின் பிறந்தநாள் சர்வதேச இறைச்சி இல்லா தினமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.