இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தனர். அத்துடன் இந்தியாவில் நேற்று வரை 3263 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 


இந்நிலையில் இன்று மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்த உள்ளார். அவர் காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனையை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 5 மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் அவர் ஆலோசனை நடத்தக் கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 


 






இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களில் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என பல கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதித்து வருகின்றன. இந்த ஆலோசனைக்கு பிறகு கொரோனா பரவல் அதிகம் உள்ள மாநிலங்களில் வேறு சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது தொடர்பாக தெரியவரும். 


இந்தியாவில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை எப்போது முடிவிற்கு வரும் என்பது தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வை பெங்களூருவிலுள்ள ஐஐஎஸ்சி மற்றும் ஐஎஸ்ஐ அமைப்புகள் சேர்ந்து நடத்தியது. அந்த ஆய்வின்படி, இந்தியாவில் கொரோனா பரவலின் மூன்றாவது அலை வரும் ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் உச்சத்தை தொடும் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா பரவல் உச்சத்திற்கு வரும் நாட்கள் மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களில் எத்தனை பேர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் மற்றும் எத்தனை பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்பதை பொருத்து இது அமையும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.


மேலும் படிக்க: அதிகரிக்கும் கொரோனா - மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி விரைவில் ஆலோசனை