அவசரகால கொரோனா நிதி உள்ளிட்ட உதவிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா மற்றும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, நித்தி ஆயோக் உறுப்பினர்(சுகதாரம்) டாக்டர் வி.கே.பால், உள்துறை செயலாளர் ஏ.கே.பல்லா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், உயிரித் தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே கலந்துக்கொண்டர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும், மாவட்ட அளவில் சுகாதார உட்கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், அவசரகால கொரோனா நிதி உள்ளிட்ட உதவிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் இந்தக் கூட்டத்தில், இதுவரை 31% சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமரிடம் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
கொரோனா பாதிப்பு சூழல் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை காலை ஆலோசனை நடத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்