70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் ஆயுஷ்மான் திட்டம் விரிவுபடுத்தப்பட்டதன் மூலம் 60 மில்லியன் முதியோர் உட்பட சுமார் 45 மில்லியன் குடும்பங்கள் பயன் அடைந்துள்ளது என மத்திய அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார்.  


உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் 77ஆவது அமர்வில் தொடக்க உரையாற்றிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா, அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, மத்திய அரசு உலகின் மிகப்பெரிய பொது நிதியுதவி பெறும் சுகாதார உத்தரவாதத் திட்டமான ஆயுஷ்மான் ஆரோக்கிய திட்டம் (ஏபி பிஎம்-ஜேஏஒய்) என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது.


உலகின் மகிப்பெரிய சுகாதார திட்டம்:


இந்த முயற்சி 120 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களை உள்ளடக்கியது, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6,000 அமெரிக்க டாலர் மருத்துவமனை காப்பீட்டு நன்மையை வழங்குகிறது. 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் இந்தத் திட்டத்தை அரசு சமீபத்தில் விரிவுபடுத்தியுள்ளது என்று அவர் எடுத்துரைத்தார்.


"இந்த விரிவாக்கம் 60 மில்லியன் முதியோர் உட்பட சுமார் 45 மில்லியன் குடும்பங்களுக்கு இலவச சுகாதாரக் காப்பீட்டுத் தொகையை வழங்குவதன் மூலம் பயனளிக்கும். இந்தியாவின் வளர்ந்து வரும் வயதான மக்கள்தொகைக்கு உலகளாவிய மற்றும் உள்ளடக்கிய சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று அவர் கூறினார்.


தொற்றா நோய்கள் முன்வைக்கும் வளர்ந்து வரும் பொது சுகாதார சவால்களை ஒப்புக்கொண்ட மத்திய சுகாதார அமைச்சர், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் போன்ற நிலைமைகளுக்கு தீர்வு காண 2010 முதல் தொற்றா நோய்களுக்கான தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது.


கலங்கரை விளக்கமாக திகழும் இந்தியா:


டிஜிட்டல் சுகாதார அரங்கில் கலங்கரை விளக்கமாக இந்தியா திகழ்கிறது என்று கூறிய நட்டா, இந்தியாவின் ஜி20 தலைமையின் போது தொடங்கப்பட்ட உலக சுகாதார அமைப்பால் நிர்வகிக்கப்படும் வலையமைப்பான டிஜிட்டல் சுகாதாரத்திற்கான உலகளாவிய முன்முயற்சி மூலம் தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவு வழங்கப்படுகிறது.


இது ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம், இ-சஞ்சீவனி, ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம் (IHIP), SAKSHAM போன்ற டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (DPI) பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது என்று கூறினார். கோவிட் -19 தொற்றுநோய்களின் போது கோவின் டிஜிட்டல் தளத்தின் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தொடர்ந்து, உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்திற்காக ஆன்லைன் டிஜிட்டல் தளமான UWIN ஐ இந்தியா கருத்தாக்கம் செய்துள்ளது.


இந்தப் போர்டல் அனைத்து தடுப்பூசி நிகழ்வுகளையும் பதிவுசெய்து, கண்காணிக்கும் என அவர் தெரிவித்தார். பல்வேறு தென்கிழக்கு ஆசிய உறுப்பு நாடுகளில் பாரம்பரிய மற்றும் மாற்று மருத்துவம் ஆற்றும் முக்கிய பங்கைப் பாராட்டிய நட்டா, உலக அளவில் பாரம்பரிய மருத்துவ முறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தை உருவாக்குவதில் உலக சுகாதார அமைப்புக்கு இந்தியா ஆதரவளித்துள்ளது என்று வலியுறுத்தினார்.


"இந்த முறையை பாரம்பரிய மருத்துவ முறையுடன் ஒருங்கிணைப்பதில் இந்தியாவின் அனுபவம் முழுமையான சுகாதார சேவையை வழங்குவதற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், சுகாதார சேவைகளின் வரம்பை விரிவுபடுத்துவதற்கும் வழிவகுத்தது" என்று அவர் கூறினார்.