பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
86 வயதான ரத்தன் டாடா, நள்ளிரவு 12.30- 1 மணி வாக்கில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் பரவின. குறிப்பாக ரத்த அழுத்தக் குறைவு காரணமாக, அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அதற்கு ரத்தன் டாடாவே மறுப்புத் தெரிவித்துள்ளார்.
வதந்தியில் துளி அளவும் உண்மையில்லை
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’என் உடல்நலம் குறித்துப் பரவி வரும் வதந்திகள் குறித்து அறிந்தேன். அவற்றில் துளி அளவும் உண்மையில்லை. தற்போது என்னுடைய வயது தொடர்பான மருத்துவ நிலைகளுக்காக மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறேன், அவ்வளவுதான்.
இதில் கவலைகொள்ள எதுவுமில்லை. பொது மக்களும் ஊடகங்களும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொகிறேன்’’ என்று ரத்தன் டாடா பதிவிட்டுள்ளார்.
150 ஆண்டுக்கும் மேலாக செயல்படும் டாடா
இந்தியாவின் வளர்ச்சியையும் இந்தியாவின் தொழில்துறையையும் டாடா குழுமம் இல்லாமல் எழுதி விட முடியாது. உப்பு முதல் சாப்ட்வேர் வரை பெரும்பாலான பிரிவுகளில் டாடா குழுமம் இயங்கி வருகிறது. இரண்டாம் தலைமுறைக்குத் தொழிலை கடத்துவதே பெரும் சவாலாக இருக்கும் இந்த சூழலில் 150 ஆண்டுகளுக்கு மேலாக டாடா செயல்பட்டு வருகிறது.
இண்டிகோ, டைட்டன், வோல்டாஸ், தனிஷ்க், விஸ்தாரா, தாஜ் உள்ளிட்டவை டாடாவின் முக்கியமான பிராண்ட்கள் ஆகும். இவைதவிர சந்தை மதிப்பில் இரண்டாம் இடத்தில் இருக்கும் டிசிஎஸ் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் பல பரந்து விரிந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.