பாசுமதி அரிசியின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் அதன் அடிப்படை விலையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பாசுமதி அரிசியின் விலை குறைகிறதா?
இந்தியர்களின் முதன்மையான உணவு வகைகளில் ஒன்றாக இருப்பது அரிசி சாப்பாடு. குறிப்பாக, தென் இந்தியர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாக அரிசி சாப்பாடு உள்ளது. வட இந்தியாவை பொறுத்தவரையில், பாசுமதி அரிசி பயன்பாடே அதிகம்.
கடந்த சில ஆண்டுகளாக தென் இந்தியாவிலும் பாசுமதி அரிசி பயன்படுத்துவது அதிகரித்து வந்துள்ளது. புவிசார் குறியீடு பெற்ற அரிசி ரகத்தில் பாசுமதி அரசி வகை முதன்மையாக உள்ளது. இந்த நிலையில், இதன் ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான அடிப்படை விலையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும் உள்நாட்டில் போதுமான அளவு அரிசி கிடைப்பதைக் கருத்தில் கொண்டு, பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான அடிப்படை விலையை முற்றிலுமாக நீக்க மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் முடிவுக்கு காரணம் என்ன?
வேளாண் மற்றும் பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், பாசுமதி அரிசிக்கு எதார்த்த நிலைக்கு மாறாக விலை நிர்ணயம் செய்வதைத் தடுக்கவும், ஏற்றுமதி நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் ஏற்றுமதி ஒப்பந்தங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கும்.
பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி மீதான ஏற்றுமதி தடையைக் கருத்தில் கொண்டு, ஏற்றுமதியின் போது பாஸ்மதி அல்லாத அரிசியை பாஸ்மதி அரிசி என தவறாக வகைப்படுத்துவதைத் தடுக்க, 2023 ஆகஸ்ட் மாதம் ஒரு மெட்ரிக் டன்னுக்கு 1,200 டாலர் என்ற அடிப்படை விலை அறிமுகப்படுத்தப்பட்டது. வர்த்தக அமைப்புகள் மற்றும் பங்குதாரர்களின் பிரதிநிதித்துவங்களைத் தொடர்ந்து, அரசு, 2023 அக்டோபரில் அடிப்படை விலையை மெட்ரிக் டன்னுக்கு 950 டாலராகக் குறைத்தது.
கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் உணவு பொருள்களின் விலையேற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இந்த நிலையில், பாசுமதி அரிசியின் விலை குறைவு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக, பாசுமதி அரிசியால் செய்யப்படும் பிரியாணி விலை குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிக்க: இந்த மாசத்தோட கடைசி முகூர்த்தம்! தமிழ்நாட்டில் காய்கறிகள், பூக்கள் விற்பனை படுஜோர் - வியாபாரிகள் ஹாப்பி