கேரள கசவு சேலை என்பது ஓணம் திருவிழாவின்போது மட்டுமல்ல கேரளாவில் எல்லா சுபநிகழ்ச்சிகளிலும் உடுத்தப்படும் உடைதான். தமிழ்நாடு உட்பட ஓணத்தைக் கொண்டாடும் பல மாநிலங்களிலும் தற்போது அம்மாநில பெண்களால் விரும்பி அணியப்படுவது கேரளா புடவை என்றழைக்கப்படும் கசவுப்புடவை.


கசவு சேலை என்றும் அழைக்கப்படும் கேரள பாரம்பரிய சேலை, அம்மாநிலத்தில் திருவிழாக்கள் மற்றும் திருமணங்களின்போது பெண்கள் விரும்பி அணியும் உடைகளில் ஒன்றாக உள்ளது. பொதுவாக வெள்ளை அல்லது கிரீம் வண்ணத்தில் வரும் இந்த சேலைகளின் பார்டர்கள் தங்க நிறத்தில் இருப்பது வழக்கம். எமரால்டு பச்சை போன்ற பலருக்கும் பிடித்த வண்ணங்களும் அதில் பயன்படுத்தப்படுகின்றன, இருப்பினும் தங்க நிறம் பாரம்பரியத்தின் அடையாளமாக உள்ளது.


திருவோணம்


கேரள மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். ஆவணி மாதம் - அஸ்தம் நாளில் தொடங்கும் இந்த பண்டிகை, திருவோணம் வரை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையின்போது, பெண்கள் வழக்கமான வெள்ளை மற்றும் தங்க நிற சேலைகளை உடுத்திக் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த பண்டிகை, கேரளாவை அலங்கரித்ததாக நம்பப்படும் விஷ்ணுவின் வாமன அவதாரத்திற்கு மரியாதை செலுத்துவதாக நம்பப்படுகிறது. 


கேரள கசவு சேலை


கசவு சேலை என்பது கேரளாவின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதி. இது பல நூற்றாண்டுகளாக கேரளாவின் வரலாற்றில் வேரூன்றி உள்ளது. கடந்த காலத்தில், கசவு சேலையின் நூல்கள் செழிப்பு, செல்வம் மற்றும் ஆடம்பரத்தைக் குறிக்கும் தூய தங்கத்தால் நெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பிற்காலத்தில், தங்கம் அரிதாகி, விலை உயர்ந்ததால், கைவினைஞர்கள் தங்கம் மற்றும் செம்பு-பூசிய வெள்ளி நூல்களின் கலவையாக மாறின. இருப்பினும் சேலைகளின் அடையாளமான தங்க நிறத்தை விடாமல், தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.


வெள்ளை, தங்கநிறம்


இந்த சேலையின் அழகிய வெள்ளை நிறம், தூய்மை, எளிமை மற்றும் அமைதியைக் குறிக்கிறது. அதே சமயம் ஆடம்பரமான தங்க பார்டர் செழுமை மற்றும் மகத்துவத்தைக் குறிக்கிறது. இந்த வண்ணங்கள் இயற்கையின் உருவகமாகவும் புகழப்படுகின்றன. சேலையின் வெள்ளை நிறம் இயற்கையின் தீண்டப்படாத அழகைக் குறிக்கிறது. அதே சமயம் தங்க நிற பார்டர்கள் சூரியனின் கதிர்களை பிரதிபலிக்கின்றன. ஒட்டுமொத்தமாக, இந்த சேலை கேரள பகுதியின் பசுமையான சூழலுக்கும் இயற்கை வளத்திற்கும் மரியாதை செலுத்துகிறது.


ஏன் இத்தனைச் சிறப்பு?


வயது, சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பால், கசவு சேலை கேரள பெண்களை ஒன்றிணைத்து அனைவரும் சமம் என்ற கூற்றை ஆழமாகப் பதிவு செய்கிறது. அனைத்து தரப்பு பெண்களும் பண்டிகைகளின்போதும், இந்த பாரம்பரிய உடையை அணிந்து, ஒற்றுமை உணர்வை வளர்க்கின்றனர். நுண்ணிய பட்டு அல்லது பருத்தியில் இருந்து வடிவமைக்கப்பட்ட, இந்த சேலையுடன் தங்க பார்டர் இணைவது, பலரை ஈர்க்கிறது. மேலும் இந்த சேலை சிறப்பு நெசவு நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது.


இதனால் இந்த சேலை கேரளா மட்டுமின்றி அண்டை மாநிலமான தமிழ்நாடு மற்றும் கர்நாடகா பகுதிகளிலும் விரும்பி உடுத்தும் உடையாக மாறியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், கேரளாவின் கைத்தறி பாரம்பரியத்தின் சாரத்தை வெளிப்படுத்தும் இந்த சேலையின் எளிமையே அதை சிறப்பானதாக மாற்றுகிறது.