கடந்த 2019ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 30 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. அதேபோல, புதிதாக தொடங்கப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி மேலும் குறைக்கப்பட்டது. அதன்படி, 2019ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 1ஆம் தேதிக்கு பிறகு திறக்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவிகிதம் வரை வரி குறைக்கப்பட்டது.


கார்ப்பரேட் வரி குறைப்பால் நிகழ்ந்தது என்ன?


இந்த வரி குறைப்பால், கடந்த 2020-21 நிதியாண்டில் 1 லட்சத்து 241 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. இந்த நிலையில், கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டது ஏன் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.


முதலீடுகளை ஈர்ப்பதற்காக கவனமாக திட்டமிட்ட பிறகுதான் கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டது. இந்த முடிவு மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். தொழில் - தொழிலாளர் உறவில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடனான உரையாடலில் கார்ப்பரேட் வரி குறைப்பு மற்றும் உற்பத்தி மானிய திட்டங்களின் நன்மைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசிய நிர்மலா சீதாராமன், "இது மூலதன முதலீடுகளை தூண்டுகிறது. கொஞ்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. 


மனம் திறந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்:


இந்தியாவில் நிறுவனங்களுக்கு அதிக வரி வசூலிக்கப்படுகிறது. அதிக முதலீடுகளைக் கொண்டுவரும் நோக்கில் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. இது வேலைகளை உருவாக்கும். பொருளாதாரத்தை தூண்டும். தற்போது முதலீடுகளை ஈர்ப்பதற்காக இத்தகைய வரி கட்டமைப்பு மாற்றங்களை அமல்படுத்த பல நாடுகள் சிந்தித்து வருகிறது. 


கிரீன்ஃபீல்ட் (இந்தியாவில் புதிதாக தொடங்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள்) மற்றும் பிரவுன்ஃபீல்ட் (ஏற்கனவே உள்ள நிறுவனங்களை வாங்கி முதலீடு செய்வது) முதலீடுகளும் குவிந்து வருகின்றன. இப்போதும் முன்னோக்கி செல்ல இதுவே வழி என நினைக்கிறேன்.


வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய துறைகளில் கூடுதல் திறன்கள் வருவதை உறுதிசெய்ய வேண்டும். முன்பை போல், இந்த மாதிரியான முதலீடுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என கருத்து நிலவுகிறது. இதற்கு காரணம், 4.0 என்ற தொழில் புரட்சி உருவாகி வருவதை அறிந்திருந்தோம். எனவே, இந்த முடிவை எடுத்தோம். மூன்றாம் தலைமுறை  வேர்ல்ட் வைட் வெப் வருகிறது.


உண்மையில் விஷயம் என்னவென்றால், தொழில்துறை, குறிப்பாக உற்பத்தியில், ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது. மீட்டமைப்புகள் நிகழும்போது, ​​​​அந்த மீட்டமைப்பைச் சந்திக்கத் தேவையான திறன்களை தொழிலாளர் சக்தியும் பெறுகிறது. எனவே உழைப்பின் தேவை இருக்கும். அதனால்தான் அரசாங்கம் தொழில்துறையில் இறங்குவதற்கு  திறன்களை மேம்படுத்தியுள்ளது" என்றார்.