முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அளிக்கப்பட்ட எண்ணெய் பத்திரங்களால் தற்போது பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைக்க முடியாது என ஒன்றிய அரசு கூறியுள்ளது.


காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் முதலானவற்றின் மீது மானியங்கள் வழங்கப்பட்டன. எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு அரசின் பட்ஜெட்டில் இருந்து மாநியப் பணத்தை அளிப்பதற்குப் பதிலாக, அப்போதைய காங்கிரஸ் அரசு 1.34 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் கடன் பத்திரங்கள் விநியோகித்துள்ளது. இந்தக் கடன்களின் மீதான வட்டியையும், கடனையும் அடைப்பதற்கு பெட்ரோல், டீசல் மீது வரி அதிகமாக வசூலிக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.


தற்போதைய பாஜக அரசு இதுபோன்ற கடன் முடிவுகளை வங்கிகள் விவகாரத்தில் செய்துள்ளது. ஏறத்தாழ 3.1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டிருக்கும் கடன் பத்திரங்களின் விளைவுகள் 2028 முதல் 2035ஆம் ஆண்டு வரை வெளிவரும் எனக் கூறப்படுகிறது.



கடந்த திங்கள்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பிரதமர் நரேந்திர மோடியின் அரசு 2012-13 ஆம் ஆண்டில் காங்கிரஸ் காலத்தில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதன் விளைவை இன்று சுமந்து கொண்டிருக்கிறது. இது ஒரு தந்திரமான உத்தி” என்று கூறிய அவர், முந்தைய அரசு பெட்ரோல் மீதான வரியைத் தள்ளுபடி செய்து, தற்போதைய அரசுக்குக் கடன் பத்திரங்களைத் தள்ளி விட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ”காங்கிரஸ் ஆட்சியில் ஏறத்தாழ 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 7 நிதியாண்டுகளாக இதற்கான வட்டித் தொகையாக ஆண்டுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தி வருகிறது தற்போதைய அரசு. இந்தத் தொகையைக் கட்டும் நிலை இல்லாமல் இருந்திருந்தால், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உயர்த்தாமல் இருந்திருக்கலாம்” என்று கூறியுள்ளார்.


கச்சா எண்ணெய் மீதான அரசுக் கட்டுப்பாடுகள் கடந்த ஆண்டுகளில் தளர்த்தப்பட்டு வந்திருக்கின்றன. விமானத்திற்கான டர்பைன் எரிபொருள் 2002ஆம் ஆண்டிலும், பெட்ரோல் 2010ஆம் ஆண்டிலும், டீசல் 2014ஆம் ஆண்டிலும் அரசுக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கின்றன.


அதற்கு முன்பு வரை, அரசு நிர்ணயிக்கும் விலைக்கு விற்பனையாளர்கள் பெட்ரோல், டீசல் முதலானவற்றை விற்று வந்தனர். இதனால் ஆயில் நிறுவனங்கள் நஷ்டமடைந்தன. இதை அரசு சரிசெய்ய வேண்டும் என்ற சூழல் எழுந்ததால், அரசு இதில் இருந்து விலகி, சந்தையின் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என அறிவித்தது. இதன்மூலம், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது, மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலையும் குறையும் என்று அப்போதைய காங்கிரஸ் அரசு முடிவுசெய்தது.



உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியா முழுவதும் நுகர்வோருக்கான விலைகளில் ஏற்றமே மிஞ்சி வருகிறது. இதன் பின்னணியில், பெட்ரோல், டீசல் மீதான வரிகளின் வழியாக அதிக வருவாய் ஈட்டுவதற்காக, ஒன்றிய, மாநில அரசுகள் விதிக்கும் புதிய வரிகள் இருக்கின்றன. இதனால் சாதாரண மக்கள் அதிக விலை கொடுத்து பெட்ரோல், டீசல் முதலானற்றை வாங்க வேண்டியுள்ளது.


இந்தக் கடன் பத்திரங்களால் அரசு தரப்பில் இருந்து, தற்போதைய நிதியாண்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் பணமும், 2023-24ஆம் ஆண்டில் 31 ஆயிரம் கோடி ரூபாய் பணமும், 2024-25ஆம் ஆண்டில் 52 ஆயிரம் கோடி ரூபாய் பணமும், 2025-26ஆம் ஆண்டில் 36 ஆயிரம் கோடி ரூபாய் பணமும் வட்டியாக வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.