இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு முதலமைச்சரை கடுமையாக சாடியுள்ளார். அப்போது பேசிய அவர், “ தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே கொடுக்க வேண்டிய நிதியை முன்கூட்டியே கொடுத்துள்ளோம், சுமார் ரூ.900 கோடி மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் டிசம்பர் 12 ஆம் தேதியே அறிவித்தது. தொடர்ச்சியாக வானிலை மையம் மழை எச்சரிக்கை கொடுத்து வந்த நிலையில், எச்சரிக்கை கொடுக்கவில்லை என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.


மழை வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை மக்கள் பாதிக்கப்பட்டபோது அவர்களை சென்று பார்க்காமல் கூட்டணி கூட்டதிற்கு முக்கியத்துவம் கொடுத்து டெல்லிக்கு வந்தார் தமிழ்நாடு முதல்வர். அவரது கூட்டங்கள் எல்லாம் முடிந்த பின்பு, போகிற போக்கில் பிரதமரை சந்திக்கலாம் என்று சந்தித்துவிட்டு சென்றவர் தமிழ்நாடு முதல்வர். ஆனால், இரவானாலும் பரவாயில்லை ஒரு மாநிலத்தில் முதல்வர் நம்மை பார்க்க வேண்டும் என்று கேட்கிறார் என்பதற்காக அவரை பார்த்து பேசியவர் பிரதமர் மோடி.  மாநிலத்தில் பேரிடர் நடைபெறும்போது, கூட்டணி கட்சிகளே கொஞ்சம் இருங்கள் என்று சொல்லிவிட்டு அங்கே போய் மக்களோடு முதல்வர் நின்றிருக்க வேண்டும். நின்றாரா ?” என கேள்வி எழுப்பினார்.


மேலும், ” அன்புமணி ராமதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டு சரியானது இல்லை. சென்னையில் இருக்கும் வானிலை மையம் மிகவும் துள்ளியமாக கணிக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் தமிழ்நாடு அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. தேசிய பேரிடர் மீட்பு படைகள் செல்வதற்கு முன் அங்கு தமிழ்நாடு அரசு தரப்பில் யார் இருந்தார்கள்? ரூ.4000 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், எவ்வளவு மழை வந்தாலும் சென்னைக்கு பாதிப்பு இருக்காது என அமைச்சர் ஒருவர் கூறிய நிலையில், மிக்ஜாம் புயல் வந்த பிறகு ரூ. 4000 கோடியில் 42% மட்டுமே பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்திருந்தார். அப்போது அந்த பணம் எங்கே போனது? காப்பீட்டு நிறுவனங்களை 19 ஆம் தேதியே தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் பின் என்ன பாடம் கற்றுக்கொள்ளப்பட்டது? தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு பேரிடர்களை சந்தித்துள்ளது. இந்த பேரிடர்கள் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது. தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தப்படவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


அமைச்சர் உதயநிதியின் மொழியே அப்படி தான் இருக்கும், உங்கள் அப்பன் வீடு, ஆத்தா வீடு என பேசுவது அரசியலில் நல்லது கிடையாது. பதவிக்கு ஏற்றவாறு வார்த்தையை அளந்து பேச வேண்டும். மத்திய அரசு ரூ.900 கோடி வழங்கப்பட்டுள்ளது, இதனை அப்பன் வீட்டு காசு என்று சொல்ல முடியுமா? வெள்ளம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரும்  6 ஆயிரம் நிவாரணத்தை ஏன் ரொக்கமாக கொடுக்கின்றீர்கள் ? வங்கி கணக்கில் செலுத்தலாமே ? அரசு பணம் தானே அது ? உங்க அப்பன் வீட்டு சொத்தோ, என் அப்பன் சொத்தோ இல்லையே ? உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்குதான் பணம் செல்கிறதா ?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.