மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் தொற்றுக்கு பிந்தைய பாதிப்பால் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 






மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதனைத்தொடர்ந்து, மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன்பின்னர், கொரோனாவில் இருந்து மீண்ட அவர், மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, தனது பணிகளில் அவர் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முறைகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


கல்வி அமைச்சர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகளை நடத்துவது தொடர்பாக அந்தந்த மாநில கல்வி வாரியங்கள் முன்வைத்த பரிந்துரைகள் குறித்து அவருக்கு விளக்கமளிப்பார் என்றும் கூறப்பட்டன.


எட்டப்படாத பிளஸ் 2 தேர்வு முடிவு; ஏமாற்றத்தில் மாணவர்கள்


முன்னதாக மே 23ஆம் தேதி, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் கல்வி அமைச்சர்கள் மற்றும் கல்வி அமைச்சகத்துடன் தொடர்புடைய பிற அதிகாரிகள் கலந்து கொண்ட உயர் மட்டக் கூட்டத்தில், 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் வகுப்பு போல ரத்து செய்யப்படாது என்று முடிவு செய்யப்பட்டது.


கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி, சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பின்னர் , பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, குஜராத் உள்ளிட்ட பல பள்ளி வாரியங்கள் மற்றும் ஐ.சி.எஸ்.இ., வாரியம் 12 ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.





கடந்த மே 17ஆம் தேதி மத்திய கல்விதுறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையிலான அனைத்து மாநில கல்வி செயலாளர்களுடனான கூட்டத்தை தமிழ்நாடு புறக்கணித்தது. புதிய கல்வி கொள்கை, கொரோனா காலத்தில் இணையவழி கல்வி மற்றும் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக  இந்த காணொளி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், இந்தப் பேரிடர் சூழலில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் நடத்த முடியுமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என அண்மையில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்திருந்த நிலையில்  அதுதொடர்பான மத்தியக் கூட்டத்தையும் அரசு புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.