NEET UG counselling: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக, அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. கலந்தாய்வுக்கான மறுதேதி வெளியாகும் பிறகு வெளியிடப்படும் என கூறப்படுகிறது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக்ல், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.






கலந்தாய்வு ஒத்திவைப்பு:


நீட் தேர்வு அடிப்படியில் இளநிலை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான (AIQ)  கவுன்சிலிங், முதலில் ஜூலை 6-ம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால் தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே நாளில் தொடங்கவிருந்த நீட் யுஜி கவுன்சிலிங்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைக்க மறுத்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோருடன் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்றம், ஜூலை 8ம் தேதி நீட் யுஜி 2024 தேர்வு தொடர்பான பல்வேறு மனுக்களை விசாரிக்க உள்ளது.


குழப்பத்தில் மாணவர்கள்:


இந்த மனுக்களில் வினாத்தாள் கசிவு பற்றிய குற்றச்சாட்டுகள், முழுத் தேர்வையும் ரத்து செய்வதற்கான கோரிக்கைகள், மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை, தேசிய தேர்வு முகமையின் (NTA) செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கை மனுக்கள் உள்ளன. இதனால் நடந்து முடிந்த தேர்வின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுமா அல்லது தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படுமா அல்லது கலந்தாய்விற்கு புதிய கட்டுப்பாடுகள் ஏதேனும் விதிக்கப்படுமா என்ற குழப்பத்தில் மாணவர்கள் மூழ்கியுள்ளனர்.