Budget 2025: நிர்மலா சீதாராமன் படைக்கும் சரித்திரம்..! மத்திய பட்ஜெட்டில் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்கள்
Union Budget 2025 Tamilans: நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம், புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.

Union Budget 2025 Tamilans: மத்திய அரசு பட்ஜெட்டை இதுவரை தாக்கல் செய்த தமிழர்களின் விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
சரித்திரம் படைக்கும் நிர்மலா சீதாராமன்:
பெரும் எதிர்பார்ப்புகள் மற்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவில் சரிந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்தியில், 2025-26 நிதியாண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யபப்ட உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். அதேநேரம், தொடர்ந்து எட்டாவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வேறு எந்தவொரு நிதியமைச்சரும் இந்த சாதனையை நிகழ்த்தியது இல்லை. அதேநேரம், மொரார்ஜி தேசாய் வெவ்வேறு காலங்களில், 10 முறை மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் முதல் பட்ஜெட்:
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழர்களின் பங்களிப்பு எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. காரணம் சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ததே, ஆர்.கே. சண்முகம் செட்டியார் எனும் தமிழர் தான் என்பதாகும். நவம்பர் 26, 1947ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அந்த பட்ஜெட்டில், ரூ.175.15 கோடி வருவாய் இலக்காகவும், ஆண்டுக்கான மொத்த செலவினம் ரூ.197.29 கோடியாகவும், நிதிப்பற்றாக்குறை ரூ.26.24 கோடி எனவும் மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட்டில் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்கள்:
1. டி.டி. கிருஷ்ணமாச்சாரி: சண்முக செட்டியாரை தொடர்ந்து மத்திய நிதியமைச்சராக பணியாற்றிய TT கிருஷ்ணமாச்சாரி, நாட்டின் பொருளாதார மற்றும் தொழில்துறை அடித்தளத்தை கட்டியெழுப்புவதற்காக பரவலாக பாராட்டப்பட்டார். இவர் 1956-58 மற்றும் 1964-1966 காலகட்டங்களில் 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்தார்.
2. சிதம்பரம் சுப்பிரமணியம்: பொள்ளாச்சியில் பிறந்த சிதம்பரம் சுப்பிரமணியம், ஒரு மூத்த சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் பசுமைப் புரட்சியின் சிற்பியுமாக போற்றப்படுகிறார். அவர் 1975-76 மற்றும் 1976--77-ல் பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். அவரது முதல் பட்ஜெட்டில், அதிக மகசூல் தரக்கூடிய நல்ல தரமான விதைகளை வழங்குவது உட்பட விவசாயத்தில் கவனம் செலுத்தினார். அவருக்கு 1998 இல் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.
3. ஆர். வெங்கட்ராமன்: ஆர். வெங்கடராமன், மத்திய தொழில்துறை அமைச்சராகவும், நிதியமைச்சராகவும், பின்னர் பாதுகாப்பு அமைச்சராகவும், துணைக் குடியரசுத் தலைவராகவும், இறுதியாக இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் மாறுவதற்கு முன்பு, மாநில அரசியலில் ஒரு சிறந்த வாழ்க்கையைப் பெற்றிருந்தார். 1980-81க்கான நிதிநிலை அறிக்கையையும் தாக்கல் செய்தார்.
4. ப. சிதம்பரம்: தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம், 1997ல் கனவு பட்ஜெட் என பிரபலமாக அறியப்படும் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைதொடர்ந்து மேலும் 8 பட்ஜெட்களை தாக்கல் செய்தார். அதன் மூலம், தமிழ்நாட்டில் இருந்து அதிகமுறை மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இவரை தொடர்ந்து, மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற தமிழர் தான் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து, எட்டாவது முறையாக இன்று அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.