வளர்ந்த பாரதத்திற்கான பட்ஜெட்டாக இருக்கும் எனவும் ஏழைகளை அன்னை லட்சுமி ஆசிர்வதிப்பார் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். நாளை 2025 -2026ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அனைவருக்குமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைத்து எம்.பிக்களும் பங்களிப்பார்கள். மகளிர் முன்னேற்றத்திற்காக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
ஏழைகளுக்கான பட்ஜெட்டாக இது இருக்கும். ஏழைகளை அன்னை லட்சுமி ஆசிர்வதிப்பார். 2047ல் வளர்ந்த பாரதம் என்பதே இந்தியாவின் இலக்கு. இந்த பட்ஜெட் புதிய உத்வேகத்தை அளிக்கும். 2025 -2026ஆம் ஆண்டிற்கான பட்ஜெட், இந்தியர்கள் வாழ்வில் புதிய மறுமலர்ச்சியை உருவாக்கும்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏராளமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடர் நன்றாக நடக்க வேண்டும் என மகாலட்சுமியை வழிபடுகிறேன். சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்ற நோக்கத்தோடு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செயல்படுகிறது.” எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி ஏழைகளை அன்னை லட்சுமி ஆசிர்வதிப்பார் என்று கூறியுள்ளது மக்களின் மனதில் நம்பிக்கையை அளித்துள்ளது. பட்ஜெட்டில் வருமான வரி குறைப்பு நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்கட்டமைப்பு, விவசாயம் உள்ளிட்ட துறைகளை மேம்படுத்தும் வகையில் அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடம் பட்ஜெட்டில் வருமான வரி மாற்றப்படவில்லை. இந்த வருடம் பட்ஜெட்டில் வருமான வரியில் பழைய முறையை நீக்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள், அதாவது சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய வரி முறைகள் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி உங்களின் வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை வரும் வருமானத்திற்கு 5 சதவீதம் வரி இருக்கும். 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வருமானத்திற்கு 20 சதவீத வரி இருக்கும். 10 லட்சத்திற்கு மேல் வருமானம் வாங்கினால் 30 சதவீதம் வரி இருக்கும்.
புதிய வரியில் சில மாற்றங்கள் வரலாம். ஆண்டுக்கு ₹10 லட்சம் வரை சம்பளம் வாங்கும் நபர்கள் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இவ்வாறு வரி வரம்பு அதிகரிக்கப்பட்டால் ஏழை, நடுத்தர மக்கள் வரி கட்டுவதில் இருந்து சற்று பயன்பெறுவார்கள். நடைமுறையில் உள்ள புதிய வருமான வரி முறையில் 7.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 15 சதவிகிதம் வரி இருக்கும். அதை மொத்தமாக விலக்கி அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.