மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் மரணம் அடைந்த சம்பவம் இந்தியாவிற்கு நினைத்துக்கூட பார்க்க முடியாத அவமானம் என்று இன்போசிஸ் தலைவரும் பிரிட்டன் பிரதமரின் மாமனாரும் ஆன நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மற்றும் சளி மருந்தை எடுத்து கொண்டதால் காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் மரணம் அடைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டது. 


காம்பியா 66 குழந்தைகள் உயிரிழந்ததற்கு மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த நான்கு மருந்துகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு ட்விட்டர் பக்கத்தில், "காம்பியாவில் அடையாளம் காணப்பட்ட நான்கு அசுத்தமான மருந்துகள் குறித்து உலக சுகாதார அமைப்பு இன்று மருத்துவ தயாரிப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடுமையான சிறுநீரக பிரச்னை ஏற்படுவதற்கும் 66 குழந்தைகள் உயரிழந்ததரற்கும் அதற்கும் தொடர்பு இருக்கலாம். இந்த இளம் உயிர்களின் இழப்பு அவர்களது குடும்பங்களுக்கு மனவேதனைக்கு அப்பாற்பட்ட வலியை ஏற்படுத்தியுள்ளது.


அந்த நான்கு மருந்துகள் அதாவது இருமல் மற்றும் சளி மருந்துகள் இந்தியாவில் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள அந்நிறுவனம் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் உலக சுகாதார அமைப்பு மேலும் விசாரணை நடத்தி வருகிறது.


 அந்த அசுத்தமான மருந்து பொருள்கள் இதுவரை காம்பியாவில் மட்டுமே கண்டறியப்பட்டாலும், அவை மற்ற நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம். நோயாளிகளுக்கு மேலும் தீங்கு விளைவிப்பதைத் தடுக்க அனைத்து நாடுகளும் இந்த தயாரிப்புகளைக் கண்டறிந்து அவற்றை புழக்கத்தில் இருந்து அகற்றுவதை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.


நான்கு மருந்துகளில் ஒவ்வொன்றின் மாதிரிகளையும் ஆய்வக பரிசோதனை செய்ததில், அவற்றில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகியவை மாசுபாடுகளாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது" எனக் குறிப்பிட்டிருந்தது.


இந்நிலையில், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் மரணம் அடைந்த சம்பவம் இந்தியாவிற்கு நினைத்துக்கூட பார்க்க முடியாத அவமானம் என்று இன்போசிஸ் தலைவரும் பிரிட்டன் பிரதமரின் மாமனாரும் ஆன நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார்.


இன்போசிஸ் சயின்ஸ் ஃபவுண்டேஷன் சார்பில் 6 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது. பரிசுத் தொகை 10 லட்சம் அமெரிக்க டாலர். அந்த நிகழ்வில் பேசிய நாராயண மூர்த்தி உலகம் முழுவதற்கும் இந்தியா கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து விநியோகித்தது. அது பெருமித தருணம். ஆனால் கேம்பியா சம்பவம் நம் மருந்து ஒழுங்குமுறை அமைப்பின் நம்பகத்தன்மையை அசைத்துள்ளது.


நம் நாட்டில் அமலாகியுள்ள புதிய கல்விக் கொள்கையை நான் வரவேற்கிறேன். இது பேராசிரியர் கஸ்தூரிரங்கனின் கனவு. இவையெல்லாம் இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்வதைக் காட்டுகிறது. இருந்தாலும் இன்னும் பல தடைகளை நாம் தாண்ட வேண்டியுள்ளது. உலகின் தலைசிறந்த 250 பல்கலைக்கழகங்களில் ஒரே ஒரு இந்திய பல்கலைக்கழகம் கூட இடம் பெறவில்லை. நாம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசி கூட வெளிநாட்டு ஆய்வகங்களின் உதவியோடு தான் சாத்தியமாகி உள்ளது. இதுவரை நாம் டெங்குவுக்கும், சிக்குன்குனியாவுக்கும் ஒரு தடுப்பூசி கண்டறியவில்லை என்றார்.